நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக தடுக்கலாம்! பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக தடுக்கலாம்! பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
ADDED : ஜன 24, 2025 06:47 AM

கோவை : ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். அப்படி செய்யும்போதுதான், முழுமையாக கலப்படத்தை தவிர்க்க முடியும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரி மற்றும் கோவை அறம் அறக்கட்டளை சார்பில், நூல் வெளியீட்டு விழா, கல்லூரி அரங்கத்தில் நேற்று நடந்தது. கோவை அறம் அறக்கட்டளை தலைவர் ரகுராம் தொகுத்து எழுதிய, 'மறைந்திருக்கும் மர்மம்' என்ற, கலப்படத்தை கண்டறிவது தொடர்பான நுாலை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் பா.ஜ., மாநில  தலைவர் அண்ணாமலை வெளியிட்டனர்.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில், 2021ம் ஆண்டு மே முதல் 2022ம் ஆண்டு டிசம்பர் வரை, உணவு பாதுகாப்புத்துறையினர், 38 ஆயிரத்து 980 உணவு மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில், 28 சதவீதம் மாதிரிகள், பயன்படுத்த முடியாத அல்லது தரம் இல்லாதவை என தெரியவந்துள்ளது.
நம் நாடு அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், இன்னும், 10 ஆண்டுகளில், புரதச்சத்து உணவிற்கு தட்டுப்பாடு ஏற்படும். உலக அளவில், 2020ம் ஆண்டு, 4.20 லட்சம் பேர் கலப்பட உணவால் உயிரிழந்துள்ளனர். கலப்பட உணவை, உணவு பாதுகாப்புத்துறையினர்தான் கண்டுபிடிக்க வேண்டும் என, நாம் இருக்க கூடாது. கலப்பட பொருட்களை நாமே கண்டுபிடிக்கலாம்.
கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாமே கேள்வி எழுப்ப வேண்டும். அப்படி செய்யும்போதுதான், முழுமையாக கலப்படத்தை தவிர்க்க முடியும். 2023ம் ஆண்டு, உலக அளவில் கண்டறியப்பட்ட போலி பொருட்களில், 71 சதவீதம் போலிப் பொருட்கள் சீனாவில் உற்பத்தியானது என சர்வே கூறுகிறது.
வரும் 2047ல், இந்தியா, 55 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும். அதற்கு, நாம் வளர வேண்டும். ஒரு மனிதனின் வளர்ச்சியை போலவே நாட்டின் வளர்ச்சியும் இருக்கும். இப்போது நீங்களும் இளமையாக இருக்கிறீர்கள். நாடும் இளமையாக உள்ளது.
இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.
விழாவில், பா.ஜ., மாநில பொருளாளர் சேகர், கே.ஜி., மருத்துவமனையின் தலைவர் பக்தவச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

