ADDED : ஜூன் 05, 2025 11:24 PM
சென்னை:'பள்ளிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல், மாணவ, மாணவியர் விடுப்பு எடுத்தால், பெற்றோரை மறுநாள் அழைத்து வந்து காரணத்தை தெரிவிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளை வகுத்து, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், கூறியிருப்பதாவது:
மாணவர்கள், அரசு அங்கீகரித்த சீருடையை மட்டுமே அணிய வேண்டும். இறுக்கமான, முக்கால் அளவுள்ள பேன்ட், இறுக்கமான மற்றும் முழுக்கை சட்டை உள்ளிட்டவற்றை அணியக்கூடாது.
தலையில் அதிக முடி வைக்காமல், 'ஸ்மார்ட் கட்டிங்' செய்ய வேண்டும்.
பல வண்ணங்களில் பொட்டு வைப்பது, கை, கழுத்தில் வண்ணக்கயிறுகள் அணிவது, ஜாதி அடையாளங்களை குறிக்கும் பனியன் அணிவது, அடையாள ஸ்டிக்கர் ஒட்டிய சைக்கிள் எடுத்து வருவது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.
கத்தி, கூர்மையான பொருள், சைக்கிள் செயின் போன்றவற்றை பள்ளிக்கு மாணவர்கள் எடுத்து வரக்கூடாது. துாய்மையான உடையுடன், காலணியும் அணிய வேண்டும்.
மாணவியர் வண்ணக்கயிறுகள் கட்டுவது, பல வண்ண பொட்டு வைப்பது, பல வண்ணப் ரிப்பன் கட்டுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. வேறுபாடுகளை உருவாக்கும் வகையிலான பேச்சு, செயல்களில் ஈடுபடக்கூடாது.
மாணவர்களுக்கு விடுப்பு தேவைப்பட்டால், பெற்றோர் வாயிலாக ஆசிரியரிடம் தெரிவித்து, விடுப்பு பெற வேண்டும். இல்லாவிட்டால், மறுநாள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியரிடம் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.