'6 மாதம் அமைதியாக இருந்தால் இணையலாம்' ஓ.பி.எஸ்.,சை அரவணைக்க தயாராகும் அ.தி.மு.க.,
'6 மாதம் அமைதியாக இருந்தால் இணையலாம்' ஓ.பி.எஸ்.,சை அரவணைக்க தயாராகும் அ.தி.மு.க.,
ADDED : பிப் 15, 2025 03:14 AM

மதுரை: ''நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஆறு மாதங்கள் அமைதியாக இருந்தால், அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்ப்பது குறித்து பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்'' என ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
இதனால் பன்னீர்செல்வத்தை அரவணைத்துச் செல்ல அ.தி.மு.க., தயாராகி விட்டதாக அக்கட்சியினரே பரபரப்பாக பேசத் துவங்கி உள்ளனர்.
நடவடிக்கை
மதுரையில் நேற்று ராஜன் செல்லப்பா அளித்த பேட்டி:
பா.ஜ., ஆதரவு நிலைப்பாடு எடுத்து செயல்படும் பன்னீர்செல்வத்துக்கு செல்வாக்கு கூடுதலாக இருந்திருந்தால், அவரை பா.ஜ.,வே கட்சியில் இணைத்திருக்கும்.
செல்வாக்கை இழந்துள்ள அவர், 6 மாதம் அ.தி.மு.க.,விற்கு எந்த இடையூறும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து பழனிசாமியிடம் பேசி நடவடிக்கை எடுப்போம்.
வழக்கு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை பன்னீர்செல்வம் போன்றோர் தொடர்ந்து, அ.தி.மு.க.,வுக்கு எதிராக ஏற்படுத்தி வருவது, கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. அதெல்லாம் உகந்த காரியம் அல்ல என்பதும் பன்னீர்செல்வத்துக்கு நன்கு தெரியும். கட்சியின் மூத்த நிர்வாகியாக இருந்து செயல்பட்ட பன்னீர்செல்வம் போன்றோர், கட்சிக்கு எதிராக செயல்படுவது நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜுவை சந்தித்த பத்திரிகையாளர்கள், ''அ.தி.மு.க.,வில் இணைய தயாராக இருப்பதாக பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்; கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கருத்துக்கு தினகரன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?'' என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ராஜு, ''அண்ணன் பன்னீர்செல்வம், தினகரன் பேச்சுகள், அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளனர். அது அவர்கள் கருத்து. எங்களைப் பொறுத்த வரை, அ.தி.மு.க.,வில் எந்த பிளவும் இல்லை. ஊடகங்கள் தான் ஊதி பெரிதாக்குகின்றன,'' என்றார்.
அ.தி.மு.க.,வில் இருந்து பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை நீக்கிய பின், இதுவரை பன்னீரை அண்ணன் என்றும் தினகரனை சார் என்றும் சொல்லாத செல்லுார் ராஜு, நேற்று வார்த்தைக்கு வார்த்தை இருவரையும் மரியாதையோடு அழைத்தது, 'இருவரையும் மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான ஆரம்பப்புள்ளிதான்' என அ.தி.மு.க.,வினரை யூகமாக பேச வைத்துள்ளது.
பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் மீதான திடீர் பாசம் குறித்து செல்லுார் ராஜுவிடம் கேட்டபோது, ''தி.மு.க.,வில் உள்ளவர்களைகூட நான் மரியாதையாகதான் கூறுவேன். திடீர் பாசமெல்லாம் கிடையாது. இருவரையும் கட்சியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் பொதுச்செயலரான பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது. அவர் எப்போதும் நல்ல முடிவையே எடுப்பார்,'' என்றார்.
தொடர்ந்து செல்லுார் ராஜு கூறியதாவது:
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், அமைச்சராக தொடர விருப்பமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தி.மு.க.,வில் ஜாமின் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள். வழக்குகள் உள்ள அமைச்சர்களை கட்சிப்பணிக்கு ஸ்டாலின் மாற்ற வேண்டும்.
அதிக செல்வாக்கு
ஜெயலலிதா இருந்தபோது தவறு செய்த அ.தி.மு.க., அமைச்சர்கள் 10 பேரை, ஒரே இரவில் அமைச்சரவையில் இருந்து நீக்கினார். வழக்கில் தொடர்புடைய அமைச்சர்கள் மீது ஸ்டாலின் சாட்டையை சுழற்றாமல் முதுகில் தட்டிக் கொடுத்து வருகிறார்.
விஜய் ஒரு பிரபலமான நடிகர். மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. இளைஞர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் அவருக்கு சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு வழங்கி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.