ADDED : ஏப் 20, 2026 02:28 AM

கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளில், 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களின் விபரங்கள் அடிப்படையில் பார்த்தால், 34 சதவீதம் பேர், 'நெகடிவ்' மதிப்பெண்களால் மருத்துவ கனவை கைவிட்டுள்ளனர். எனவே, விடை தெரியாத கேள்விகளுக்கு பதிலளித்து, மதிப்பெண்ணை குறைத்து கொள்ளாதீர். சமீப காலமாக, முதல் முறை 'நீட்' தேர்வு எழுதி, மருத்துவக் கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாணவர்கள் அகில இந்திய மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க, 680க்கும் மேல் மதிப்பெண் பெற வேண்டும். அதேபோல, மாநில கலந்தாய்வுக்கு, 650க்கும் மேல் எடுத்தால், பெரிய அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர முடியும்.
அகில இந்திய மருத்துவ கலந்தாய்வில் சேரும் மாணவர்கள், ஓ.பி.சி., சான்றிதழை, இந்த ஆண்டு ஏப்., 1ம் தேதிக்கு பின் விண்ணப்பித்து வாங்க வேண்டும். அந்த சான்றிதழை தான் ஏற்பர். 'நீட்' தேர்வு அறைக்கு செல்வதற்கு முன், தேர்வு நடைமுறை கட்டுப்பாடு குறித்து, முழுமையாக படித்து விட்டு செல்ல வேண்டும். உலோகம் இருக்கும் கண்ணாடி, செருப்பு உள்ளிட்டவை, தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாது. அவற்றில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., என எதை படித்தாலும், நிபுணத்துவ படிப்பு முக்கியம். எம்.பி.பி.எஸ்., கிடைக்காவிட்டால், கால்நடை மருத்துவ படிப்பில் சேரலாம். மீன்வளம் மற்றும் கண் மருத்துவ படிப்பு உள்ளிட்ட படிப்புகளிலும் எதிர்காலம் உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.
