தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்க; அண்ணாமலைக்கு உதயநிதி பதில் சவால்
தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்க; அண்ணாமலைக்கு உதயநிதி பதில் சவால்
UPDATED : பிப் 20, 2025 12:30 PM
ADDED : பிப் 20, 2025 12:29 PM

சென்னை: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை, தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்க என்று அமைச்சர் உதயநிதி சவால் விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார் அண்ணாமலை. தமிழகத்திற்கான நிதியை பெற்றுத்தர துப்பில்லை. போஸ்டர் ஒட்டுவதெல்லாம் ஒரு பெரிய சாதனையா? வரச் சொல்லுங்க, நான் வீட்டுகிட்ட தான் இருப்பேன். இன்று மாலை இளைஞரணி நிகழ்ச்சி இருக்கிறது. ஏற்கனவே அறிவாலயம் பக்கம் ஏதோ செய்வேன் என்று அண்ணாமலை சொன்னார். தைரியம் இருந்தால், அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்க.
மும்மொழி கொள்கை என்பது அரசுப் பள்ளியோடு தொடர்புடையது. தனியார் பள்ளி நடத்துபவர்கள் மத்திய அரசிடம் தகுந்த அனுமதி பெற்றே நடத்துகிறார்கள். தனியார் பள்ளியில் இலவச உணவு, சீருடை கொடுக்கிறார்களா? தனியார் பள்ளி நடத்துபவர்களை பா.ஜ., தலைவர் விமர்சிப்பதே தவறானது.
மத்திய அரசிடம் இருந்து நிலுவைத் தொகையை பெறுவது தொடர்பாக தலைவருடன் பேசி முடிவெடுப்போம். எங்களின் தோழமை கட்சிகளும் முடிவெடுப்பார்கள். இன்று மாலை இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதிலும் இது பற்றி பேசி முடிவெடுப்போம், இவ்வாறு அவர் கூறினார்.
கரூரில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில், உதயநிதிக்கு அண்ணாமலை சவால் விடுத்த நிலையில், பதிலுக்கு இப்போது உதயநிதியும் சவால் விடுத்துள்ளார்.

