சாலை விபத்தை பார்த்தால் ஓடி ஒளியாதீங்க! போலீஸ் கேஸ் கிடையாது; விபத்தால் உயிரும் போகாது
சாலை விபத்தை பார்த்தால் ஓடி ஒளியாதீங்க! போலீஸ் கேஸ் கிடையாது; விபத்தால் உயிரும் போகாது
UPDATED : ஜூன் 25, 2025 05:39 AM
ADDED : ஜூன் 24, 2025 11:24 PM

கோவை; கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கடந்த மூன்று ஆண்டுகளில், 5,835 பேர் 'இன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாலை விபத்தில் சிக்கும் நபர்களுக்கு, உடனடி சிகிச்சை கிடைக்கும் வகையில், 2021ம் ஆண்டு ' இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48 திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், சாலை விபத்தில் சிக்கும் நபர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். தற்போது, இத்திட்டத்தில், 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை டீன் நிர்மலா மற்றும் அவசர சிகிச்சை பிரிவுத்துறைத்தலைவர் கல்யாண சுந்தரம் கூறியதாவது:
இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். விபத்துக்களில் சிக்குபவர்களை, போலீஸ் கேஸ் ஆகுமோ என்றெல்லாம் பயப்படாமல், பொதுமக்கள் தயக்கமின்றி, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும்.
உயிரை காப்பதற்கான அனைத்து வகை சிகிச்சையும், காப்பீட்டில் மருத்துவமனைக்கு சென்றுவிடும். ஸ்கேன், அறுவைசிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை உட்பட, அனைத்தும் இதில் அடங்கும்.
ஒரு லட்சமாக இருந்த காப்பீடு, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான நபரு டன் யாரும் இருக்கவேண்டுமென்றோ, ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை. சிகிச்சை அளிக்க வேண்டியது மருத்துவமனைகளின் கடமை.
விபத்து ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரம், 'கோல்டன் ஹவர்ஸ்' என்போம். உடனடியாக சேர்த்தால், உயிரை காப்பாற்ற அதிக வாய்ப்பு உண்டு. செலவு பற்றி கவலை வேண்டாம்.
48 மணி நேரத்திற்கு பிறகு, தேவைப்பட்டால் பிற மருத்துவமனைகளுக்கு மாறி சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். அல்லது அங்கேயேகட்டணம் செலுத்தி சிகிச்சை பெறலாம். வீட்டில் தவறி விழுவது போன்ற விபத்துக்கள், சிறு காயங்கள், புற நோயாளிகளாக சிகிச்சை பெறுவது, இத்திட்டத்தின் கீழ் பொருந்தாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.