மோசடி பத்திரங்களை ஐ.ஜி., ரத்து செய்யலாம்: மத்திய அரசின் புதிய சட்டத்தில் வழிவகை
மோசடி பத்திரங்களை ஐ.ஜி., ரத்து செய்யலாம்: மத்திய அரசின் புதிய சட்டத்தில் வழிவகை
ADDED : மே 29, 2025 05:57 AM

சென்னை : போலி ஆவணம், ஆள்மாறாட்டம் வாயிலாக பதிவு செய்யப்பட்ட மோசடி பத்திரங்களை ரத்து செய்ய, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பதிவு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
உரிமையாளருக்கு தெரியாமல் போலி ஆவணம், ஆள்மாறாட்டம் வாயிலாக சொத்துக்களை அபகரிக்க, மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதுபோன்ற பத்திரங்களை ரத்து செய்ய உண்மையான உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அழைப்பு
மோசடி குறித்து காவல் துறை விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாலும், பத்திரம் ரத்து செய்யப்படுவது இல்லை. 'உரிமையியல் நீதிமன்ற உத்தரவு பெற்று வந்தால் மட்டுமே ரத்து செய்வோம்' என, பதிவுத் துறை கூறிவந்தது.
இதனால், மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் சொத்தை மீண்டும் பெற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதை கருத்தில் வைத்து, தமிழக அரசு, பதிவு சட்டத்தில் சில பிரிவுகளை திருத்தம் செய்தது. இந்த சட்டத்திருத்தம், 2022 ஆக., 16ல் அமலுக்கு வந்தது.
இதன்படி, மோசடி பத்திரங்களை கண்டுபிடித்து, மாவட்ட பதிவாளரே ரத்து செய்ய வழிவகை ஏற்பட்டது. அதன்படி, 11,000 புகார்கள் வந்ததில், 1,100 பத்திரங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது.
சிலர் வழக்கு தொடர்ந்த போது, சட்ட திருத்தத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதனால், மோசடி பத்திரங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்காமல் பதிவுத் துறை நிறுத்தி வைத்தது.
தற்போது, 1908ம் ஆண்டு பதிவு சட்டத்துக்கு மாற்றாக, 2025ம் ஆண்டு பதிவு சட்டம் என்ற புதிய சட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன் வரைவு ஆவணத்தை, மக்கள் கருத்து தெரிவிக்க ஏதுவாக, மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இதற்கு பொது மக்கள், 30 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க அழைப்பு விடப்பட்டுஉள்ளது.
மாற்றம் என்ன?
இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போதைய, 'டிஜிட்டல்' சூழலுக்கு ஏற்ப, பத்திரப்பதிவு பணிகளை துல்லியமானதாகவும், எளிதாகவும் மேற்கொள்ள, இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. பத்திரப்பதிவில் இதுவரை காணப்பட்ட குழப்பங்களுக்கு தீர்வாக, இதில் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, புதிய சட்டத்தின் வரைவு ஆவணத்தில், 64வது பிரிவில் பத்திரங்களை ரத்து செய்வதற்கான நடைமுறைகள் விளக்கப்பட்டு உள்ளன. இதில் தவறான தகவல்கள் அடிப்படையில் பதிவான பத்திரங்களை ரத்து செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவுத் துறை ஐ.ஜி., இதற்கான அதிகாரம் பெற்றவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது, தவறான தகவல்கள் அடிப்படையில் தாக்கலாகும் பத்திரங்களை ரத்து செய்ய, சார் - பதிவாளர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இப்புதிய சட்டம் அமலுக்கு வந்தால், மோசடி பத்திரங்களை ரத்து செய்ய, உரிமையியல் நீதிமன்றங்களை அணுக வேண்டிய தேவை எழாது. இவ்வாறு அவர் கூறினார்.