ஐ.ஜி. சத்யபிரியா மீது ஒழுங்கு நடவடிக்கை டி.ஜி.பி.க்கு உள்துறை செயலர் கடிதம்
ஐ.ஜி. சத்யபிரியா மீது ஒழுங்கு நடவடிக்கை டி.ஜி.பி.க்கு உள்துறை செயலர் கடிதம்
ADDED : ஜன 25, 2024 12:52 AM

சென்னை:பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி., சத்யபிரியா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதால், அவரது விளக்க அறிக்கை உள்ளிட்ட விபரங்களை அரசுக்கு அனுப்புமாறு, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு, உள்துறை செயலர் அமுதா கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக காவல் துறைக்கு, 1997ல் நேரடி டி.எஸ்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர் சத்யபிரியா, 51. இவர் 2012ல், நியமன ஐ.பி.எஸ்., அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
அரசின் ஒப்புதல் இன்றி, 2013ல் தெற்கு சூடானுக்கு சென்றதால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்; 15 மாதங்களுக்கு பின், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, துாத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டார்.
குற்றச்சாட்டு
தற்போது, சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாக உள்ளார். இதற்கு முன், காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் போலீஸ் பயிற்சி கல்லுாரி டி.ஐ.ஜி.,யாக பணிபுரிந்துள்ளார்.
அப்போது இவர் மீது, கணவர், கல்லுாரியில் படித்த மகன் மற்றும் கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் தங்கை மற்றும் தாய் உள்ளிட்டோரின் சொந்த உபயோகத்திற்காக, அரசு வழங்கிய வாகனத்தை பயன்டுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அவரது பயன்பாட்டுக்கு, 11 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
சத்யபிரியா போலீஸ் பயிற்சி கல்லுாரியில் பணிபுரிந்த போது, போலீஸ்காரர்கள் மருதுபாண்டி, சிலம்பரசன் மற்றும் அலுவலக உதவியாளர் ஜானகிராமன் ஆகியோரை வீட்டு வேலை செய்ய கட்டாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலும் சிக்கி உள்ளார்.
இவரது மகன் ஓட்டிச்சென்ற அரசு வாகனம், 2017ல் சென்னை மதுர வாயல் அருகே விபத்தில் சிக்கியது.
ஆனால், போலீஸ்காரர் தான் அந்த வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தினார் என, ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு உள்ளது.
விசாரணை
இந்த வாகனத்தை சரிசெய்ய, போலீஸ் பயிற்சி கல்லுாரி நிதியில் இருந்து முறைகேடாக, 1.32 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் சத்யபிரியா மீது கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஏற்கனவே டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இன்ஸ்பெக்டர் நாராயணன் என்பவர் வாக்குமூலமும் அளித்து உள்ளார்.
இந்நிலையில், சத்யபிரியா விவகாரம் தொடர்பாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு உள்துறை செயலர் அமுதா கடிதம் எழுதி உள்ளார்.
அதில், 'சத்யபிரியா மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு முடிவு செய்துள்ளது.
'எனவே, சத்யபிரியா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அவர் அளித்துள்ள விளக்க அறிக்கை மற்றும் அவருக்கு தரப்பட்ட 'மெமோ' விபரங்களை உடனடியாக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.