UPDATED : மே 02, 2025 04:45 AM
ADDED : மே 02, 2025 12:54 AM

சென்னை: நிர்வாகப் பணியில் இருக்கும் மாவட்ட பதிவாளர்கள், அதே மாவட்டத்தில் பதிவான பத்திரங்கள் மீதான தணிக்கையில் ஈடுபட தடை விதித்து, பதிவுத்துறை ஐ.ஜி., தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு பதிவு மாவட்டத்திலும், நிர்வாக பணிக்காக, மாவட்ட பதிவாளர் ஒருவர் உதவி ஐ.ஜி., நிலையில் நியமிக்கப்படுகிறார். அத்துடன், தணிக்கை பணிக்கு, ஒரு மாவட்ட பதிவாளர் நியமிக்கப்படுகிறார்.
முறைகேடுகள்
நிர்வாகப் பணிக்கான மாவட்ட பதிவாளர்கள், புதிய மனைப்பிரிவுகளுக்கு வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர். தணிக்கை மாவட்ட பதிவாளர்கள், ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும் பதிவாகும், அனைத்து பத்திரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.
சில மாவட்டங்களில், தணிக்கை மாவட்ட பதிவாளர்கள், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, நிர்வாக மாவட்ட பதிவாளராக, யாரும் வராமல் பார்த்து கொள்கின்றனர். இன்னும் சில இடங்களில், நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், பத்திரங்கள் மீதான தணிக்கையை மேற்கொள்கின்றனர்.
ஒரே நபர் இரண்டு நிலைகளில் செயல்படும் போது, பல்வேறு முறைகேடுகள் மறைக்கப்படுவதும், லஞ்ச வசூலும் நடப்பதாக பதிவுத்துறைக்கு புகார்கள் சென்றன. இதைத் தடுக்க, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
தவிர்க்க வேண்டும்
அதில், கூறியிருப்பதாவது: நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், அதே மாவட்டத்துக்கு உட்பட்ட சார் - பதிவாளர் அலுவலகங்களில், பதிவான பத்திரங்களை தணிக்கை செய்வதை, கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒரு தணிக்கை மாவட்ட பதிவாளர் பணியிடம் காலியானால், வேறு மாவட்டத்தில் உள்ள, மாவட்ட பதிவாளரை தான், அங்கு கூடுதல் பொறுப்பில் நியமிக்க வேண்டும்.
தற்போது, நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், அதே மாவட்டத்தில் தணிக்கை பணிக்கு, கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருந்தால், உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், அதே பகுதியில் தணிக்கையில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது. இதுதொடர்பான உத்தரவுகளை, டி.ஐ.ஜி.,க்கள் பிறப்பிக்கவும் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.