ADDED : மே 13, 2025 04:27 AM

சென்னை : நாட்டின் முன்னணி மேலாண்மை நிறுவனமான காஷிபூர் ஐ.ஐ.எம்., சார்பில், 12வது பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது.
இதில், எம்.பி.ஏ., 319; எம்.பி.ஏ., பகுப்பாய்வு 161; இ - எம்.பி.ஏ., 34; நிர்வாக எம்.பி.ஏ., 72; முனைவர் 12 என, மொத்தம், 598 பேர் பட்டம் பெற்றனர்.
மாறிவிட்டோ ம்
நிகழ்ச்சியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூத்த ஆலோசகர் அலோக் அகர்வால், பட்டங்களை வழங்கி பேசியதாவது:
இந்த விழா, என் கல்வி நாட்களை நினைவுபடுத்துகிறது. கணினி அறிவியலின் துவக்க காலத்தில், பாங்க் ஆப் அமெரிக்காவில் டெலக்ஸ் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது, பெரிய விஷயமாக இருந்தது. ஒரே தலைமுறையில் நாம், 'பஞ்ச் கார்டு'களிலிருந்து செயற்கை நுண்ணறிவு திறனுக்கு மாறி விட்டோம்.
நம் வாழ்க்கை செயற்கைக் கோள்களால் சூழப்பட்டுள்ள காலம் இது. இந்த உலகில், தொழில்நுட்ப முன்னேற்றத்தை தவிர, மற்றவை அப்படியே தான் உள்ளன. நாம் தொழில்நுட்பத்தால், உலகின் மேலாண்மை துறை வளர்ச்சியை சாத்தியப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், 33 சதவீத பெண்கள் பட்டம் பெற்றனர். அவர்களில், 70 சதவீதம் பேர், உலக மேலாண்மை துறையில் பெண்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் வகையில், எம்.பி.ஏ., பகுப்பாய்வை தேர்வு செய்தவர்கள். அவர்கள், ஐந்து தங்கம், நான்கு வெள்ளி, ஒரு வெண்கலம் என, 10 பதக்கங்களை பெற்றனர்.
மிளிர்கிறது
நிகழ்வில், காஷிபூர் ஐ.ஐ.எம்., கல்வித்துறை இயக்குநர் சோம்நாத் சக்ரவர்த்தி பேசியதாவது:
இந்நிறுவனம், கல்வியின் சிறப்பை நிஜ உலக ஈடுபாட்டுடன் செயலாற்றும் வகையில், 'பாரத் பி- ஸ்கூல்' திட்டத்தை செயல்படுத்தி, பீஹாரின் கிராமப்புறங்களின் வளர்ச்சியில் தொழில்முனைவு, மேலாண்மை அறிவு உள்ளிட்டவற்றை செயல்படுத்துகிறது.
இந்தியர்களின் பாரம்பரிய அறிவு என்பது தத்துவம், ஆயுர்வேதம், கணிதம், வானியல், விவசாயம் மற்றும் கட்டடக்கலை உள்ளிட்டவற்றில் மிளிர்கிறது.
மேலும் இசை, நடனம், இலக்கியம், திருவிழாக்கள் மற்றும் கைவினை பொருட்களிலும் பிரதிபலிக்கிறது. அதை மாணவர்களிடம் சேர்க்கும் வகையில், 450 உலகப் பல்கலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.