ADDED : ஆக 15, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை ஐ.ஐ.டி., மற்றும் எஸ்.பி.ஐ. அறக்கட்டளை இணைந்து, மாற்றுத்திறன் தடகள வீரர்களுக்கு, உதவித் தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளன.
நாடு முழுதும், சிறந்த மாற்றுத்திறன் தடகள வீரர்களை தேர்வு செய்து, மாதம் 40,000 ரூபாய், உதவித் தொகை வழங்கி, அவர்களை தேசியம் மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில், சிறந்து விளங்க, இத்திட்டம் வழிவகை செய்யும் என, ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.
இது குறித்து, எஸ்.பி.ஐ. அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் சஞ்சய் பிரகாஷ் கூறுகையில், ''நம் நாட்டின் மாற்றுத்திறன் தடகள வீரர்களின் திறன்களை, நாங்கள் நம்புகிறோம்.
''இந்த உதவித் தொகை திட்டம் வழியே, அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியும். நம் தேசத்திற்கு பெருமை சேர்க்க, மற்றொரு படியாகவும் இது அமையும்,'' என்றார்.