கர்ப்பிணியரின் உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் நவீன கருவி உருவாக்கம்
கர்ப்பிணியரின் உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் நவீன கருவி உருவாக்கம்
ADDED : ஏப் 29, 2025 04:02 AM

சென்னை: கர்ப்பிணியருக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை எளிதாக கண்டறிய, சென்னை ஐ.ஐ.டி., நவீன கருவியை உருவாக்கி உள்ளது.
கர்ப்பிணியின் உடலில் இருந்து, கருவில் இருக்கும் குழந்தைக்கு உணவு, ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் நஞ்சுக்கொடி எனும் தொப்புள் கொடியில், நிறைய ரத்த நாளங்கள் உருவாகி வளரும்.
குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப நஞ்சுக்கொடியின் ரத்த நாளங்கள் சீராக வளராத போது, தாயிடம் இருந்து குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில் சிக்கலாகும்.
கர்ப்பிணிக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும். இதனால், சிறுநீரில் புரதம் வெளியேறுவது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். தொடர்ந்து உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, சிறுநீரக பாதிப்பு, கருவில் இருக்கும் குழந்தையின் உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.
இந்த உயர் ரத்த அழுத்த பிரச்னையை, 'பிரீ எக்ளம்ப்சியா' என்பர். இதை உடனடியாக கண்டறிந்து, மருந்துகளின் வாயிலாக சீராக்கலாம். அவ்வாறு செய்யாவிட்டால், தாய்க்கும், குழந்தைக்கும் பல்வேறு சிக்கல்கள் உருவாகும்.
கையடக்க கருவி
உயர் ரத்த அழுத்த சோதனைகளுக்கான கருவிகள், கிராமப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் இல்லா ததால், நகர்ப்புற மருத்துவ மனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கர்ப்பிணியின் உயர் ரத்த அழுத்தத்தை கண்டறியும் கருவியை, ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களும் கையாளும் வகையில், எளிய, கையடக்க வடிவில் உருவாக்கும் ஆராய்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி.,யின் அப்ளைட் மெக்கானிக்ஸ் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங், பயோ டெக்னாலஜி துறை பேராசிரியர்கள், வி.ஐ.டி.,யின் நேனோ பயோ டெக்னாலஜி துறை பேராசிரியர்கள் ஈடுபட்டனர்.
அவர்களுடன், ஸ்ரீ சக்தி அம்மா பயோ மெடிக்கல், வேலுார் ஸ்ரீ நாராயணி மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆகியவையும் இப்பணியில் பங்காற்றின.
தற்போது இந்த ஆராய்ச்சி குழு, நஞ்சுக்கொடியின் ரத்த நாளங்கள் வளர்ச்சியை கண்டறிய, நவீன தொழில்நுட்பத்தில், கையடக்கமான 'பி.ஐ.ஜி.எப்' எனும் கருவியை வடிவமைத்துள்ளது.
முதல்கட்ட வெற்றி
இந்த கருவியின் வாயிலாக, பிரீ எக்ளம்ப்சியா பிரச்னை உள்ள 11 கர்ப்பிணியரின் ரத்த மாதிரிகளையும், அந்த பிரச்னை இல்லாத கர்ப்பிணியரையும் சோதித்து வெற்றி கண்டுள்ளது.
இது குறித்து, ஆராய்ச்சி குழுவில் இடம் பெற்றிருந்த சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் ராகவேந்திரா சாய் கூறுகையில், ''மிகவும் நுட்பமான கருவியை, எளிய வடிவமைப்பில் மாற்றும் தொழில்நுட்ப சோதனையில், முதல்கட்ட வெற்றியை அடைந்துஉள்ளோம்.
''அடுத்தகட்டமாக, அதை பயன்பாட்டு கருவியாக மாற்றும் ஆய்வை தொடர உள்ளோம். விரைவில், பொது பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் இந்த கருவி கிடைக்கும். இதனால், தாய் - சேய் நலம் பாதுகாக்கப்படும்,'' என்றார்.