ADDED : ஏப் 15, 2025 11:51 PM
சென்னை:அஜித் நடித்த, குட் பேட் அக்லி படத்தில், தன் மூன்று பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக, அப்படத்தின் தயாரிப்பாளரிடம், ஐந்து கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித், த்ரிஷா நடித்த, குட் பேட் அக்லி படம் வெளியாகி, ஆறு நாட்களில், 180 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இப்படத்தில் இளையராஜா இசையமைப்பில், ஏற்கனவே வெளியான, 'ஒத்த ரூபா தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக்குருவி' போன்ற பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
இப்பாடல்களை தன் அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக, இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர், குட் பேட் அக்லி படத் தயாரிப்பாளருக்கு, ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.
அதில், 'ஒரு வார காலத்திற்குள், சம்பந்தப்பட்ட பாடல்களை நீக்கி விட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும். பாடல்கள் வாயிலாக கிடைத்த வருவாய் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், வழக்கு தொடுக்கப்படும்' என்று, கூறப்பட்டுள்ளது.