இளையராஜா பாடல் விவகாரம்; தயாரிப்பாளர் மனு தள்ளுபடி
இளையராஜா பாடல் விவகாரம்; தயாரிப்பாளர் மனு தள்ளுபடி
ADDED : டிச 04, 2025 05:32 AM

சென்னை: குட் பேட் அக்ளி படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'மைத்திரி மூவி மேக்கர்ஸ்' தயாரிப்பில், அஜித் நடிப்பில் குட் பேட் அக்ளி திரைப்படம், சமீபத்தில் வெளியானது. இதில், 'இளமை இதோ இதோ, ஒத்த ரூபாய் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்களை, தன் அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக, இளையராஜா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த தடையை நீக்க கோரி, தயாரிப்பு நிறுவனம் தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி என்.செந்தில்குமார் நேற்று பிறப்பித்த உத்தரவில், 'பாடல்களை உருமாற்றம் செய்வதைத் தடுக்கவும், அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தடுக்கவும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உரிமை உள்ளது' எனக் கூறி, பட தயாரிப்பு நிறுவன மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

