அனுமதியின்றி பயன்படுத்திய இளையராஜாவின் பாடல்: 'டியூட்' படத்தில் இருந்து நீக்க ஐகோர்ட் உத்தரவு
அனுமதியின்றி பயன்படுத்திய இளையராஜாவின் பாடல்: 'டியூட்' படத்தில் இருந்து நீக்க ஐகோர்ட் உத்தரவு
UPDATED : நவ 28, 2025 11:11 AM
ADDED : நவ 28, 2025 11:10 AM

சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‛டியூட்' படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் கருத்த மச்சான் பாடலை நீக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், சமீபத்தில், டியூட் படம் வெளியானது. இந்த படத்தில், தன் அனுமதியின்றி, 'கருத்த மச்சான், நுாறு வருஷம்' ஆகிய இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால், அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என, இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை
இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில் குமார் முன் விசாரணைக்கு வந்தது. இளையராஜா தரப்பில், 'அனுமதியின்றி, பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. பாடலுக்கான உரிமை என்னிடம் உள்ளதால், படத்தில் இடம்பெற்ற பாடலை நீக்க உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.
உத்தரவு
படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், 'பாடல்களை பயன்படுத்த சோனி நிறுவனத்திடம் அனுமதி பெற்றுள்ளோம்' என தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்த வழக்கு இன்று (நவ.,28) விசாரணைக்கு வந்தது.
அப்போது, படத்தில் அனுமதியின்றி பயன்படுத்திய இளையராஜாவின் கருத்த மச்சான் பாடலை நீக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. பாடலை நீக்க 7 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்தார். பாடலை உடனடியாக நீக்கும்படி தெரிவித்துள்ளார்.

