சட்டவிரோத மருந்து விற்பனை: 76 மருந்தகங்களின் உரிமம் ரத்து
சட்டவிரோத மருந்து விற்பனை: 76 மருந்தகங்களின் உரிமம் ரத்து
ADDED : பிப் 18, 2025 04:34 AM
சென்னை: டாக்டர்களின் பரிந்துரையின்றி, மருந்துகளை சட்டவிரோதமாக விற்ற, 76 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 40,000க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. நுாற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றின் செயல்பாடுகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும், மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கண்காணித்து வருகிறது.
குறிப்பாக, டாக்டரின் பரிந்துரையின்றி, சில மருந்துகள் சட்டவிரோதமாக விற்கப்படுகிறதா என, அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது.
அப்போது, மருந்தகங்களில், மனநல மாத்திரைகள், வலி நிவாரண மருந்துகள், துாக்க மாத்திரை, கருத்தடை மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள், டாக்டரின் பரிந்துரை இல்லாமல் விற்கப்படுவது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதர் கூறியதாவது:
மருந்து கடைகளில், டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்து விற்பது சட்டப்படி தவறான செயல். சில மருந்துகளை அவ்வாறு விற்பது, சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
அதன்படி, ஜன., 1 முதல், தற்போது வரை ரசீது இல்லாமல், மருந்து விற்ற 59 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதை தவிர, டாக்டர்களின் பரிந்துரையின்றி, கருத்தடை, துாக்க மாத்திரை விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட 17 மருந்தகங்களின் உரிமம், முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மற்றொருபுறம், விதிகளுக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

