சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் சென்னையில் பல இடங்களில் 'ரெய்டு'
சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் சென்னையில் பல இடங்களில் 'ரெய்டு'
ADDED : மார் 15, 2024 01:14 AM

சென்னை:சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து, சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் மற்றும் எஸ்.டி., கூரியர் அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை தி.நகர் பசுல்லா சாலையில், 'சாய் சுக்கிரன் வெஞ்சர்' என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தை, நரேஷ் சுப்பிரமணி மற்றும் சந்தான கிருஷ்ணன் யுவராஜ் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் நெடுஞ்சாலைத் துறையில் 'டெண்டர்' எடுத்து, சாலைகளில் ஒளிரும் விளக்கு பொருத்துதல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், 'சாய் சுக்கிரன் வெஞ்சர்' நிறுவனத்தில் நேற்று காலை 9:30 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல, சென்னை தேனாம்பேட்டையில், 'எஸ்.எம்., ஸ்மார்ட்' என்ற நிறுவனத்திலும் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் வீடு உள்ளது. அவர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில், ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜாபர் சாதிக் வீடு அருகே உள்ள நிறுவனம் ஒன்றில் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை பல்லாவரத்தில், வெட்டர் லைன் பகுதியில், எஸ்.டி., கூரியர் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் இயக்குனராக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் லோக்சபா தொகுதி எம்.பி., நவாஸ் கனி உள்ளார்.
அவரது மூத்த சகோதரர் அன்சாரி, எஸ்.டி., கூரியரின் தலைமை இயக்குனராக உள்ளார். மற்றொரு சகோதரர் சிராஜுதீன் இணை இயக்குனராக உள்ளார். எஸ்.டி., கூரியர் வாயிலாக, சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, எஸ்.டி., கூரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேற்று காலை 8:00 மணியளவில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல, சென்னை சங்கர் பகுதியில், ரியாஸ் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்துள்ளது. இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல வடலுார் அப்பு புட் புராடக்ட்ஸ் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னை தேனாம்பேட்டையில் பதுங்கி இருந்த, கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதானந்தம், 45, நேற்று முன்தினம் கைதாகி, டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஒருநாள் காவல் விசாரணை அளிக்கப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக் மற்றும் சதானந்தம் அளித்த வாக்குமூலத்தின்படி, சென்னை அடுத்த பெருங்குடி, கல்லுக்குட்டை, ரவிச்சந்திரன் நகர் இரண்டாவது தெருவில் உள்ள வீட்டை, போதைப்பொருள் கடத்தலுக்கு கிடங்கு மற்றும் தொழிற்சாலையாக பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அங்கு, டில்லியில் இருந்து வந்திருந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று மதியம் 12:00 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. கட்டைப்பை ஒன்றில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இந்த வீடு, ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதானந்தத்திற்கு சொந்தமானது என, கூறப்படுகிறது. இந்த இடத்தில் மொத்தம் ஐந்து வீடுகள் உள்ளன. இவற்றில், இரு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டு, சிலர் குடியிருந்து வருகின்றனர். சோதனை நடத்தப்பட்ட வீட்டிற்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசிப்போர் கூறுகையில், 'ஜாபர் சாதிக் மற்றும் சதானந்தம் ஆகியோர் கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட தானியங்களிலிருந்து சத்து மாவு தயாரித்து விற்பதாக எங்களிடம் தெரிவித்தனர்.
'இந்த வீட்டிற்கு நைஜீரியர்கள் வந்து சென்றுள்ளனர். போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையாக பயன்படுத்தி வந்தது, தற்போதுதான் எங்களுக்கு தெரிய வருகிறது' என்றனர்.

