ஏரி, குளங்களில் விதிமீறி அள்ளப்படும் வண்டல் மண்: சீரழியும் நீர்நிலைகள்
ஏரி, குளங்களில் விதிமீறி அள்ளப்படும் வண்டல் மண்: சீரழியும் நீர்நிலைகள்
UPDATED : ஜூலை 13, 2025 04:15 AM
ADDED : ஜூலை 12, 2025 11:17 PM

தஞ்சாவூர்:ஏரி, குளங்களில் விதிமீறி அள்ளப்படும் வண்டல் மண்ணால், நீர்நிலைகள் சீரழிந்து வருவதாக, நீர்நிலை மீட்பாளர்கள் மற்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், ஏரி மற்றும் குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதில், ஏரி, குளங்களில், 30 கன மீட்டர் அல்லது ஐந்து லோடு லாரிகள் வரை வண்டல் மண், நிபந்தனைகளுக்கு உட்பட்டு கட்டணமின்றி எடுத்துக்கொள்ள முடியும்.
மூன்று அடி ஆழத்திற்கு மேல் மண் எடுக்கக்கூடாது, ஒரே சீராக மண் எடுக்க வேண்டும், கரைகளை சேதப்படுத்தக்கூடாது என்ற நிபந்தனைகள் உள்ளன.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி கடைமடை பகுதியில், ஏரி, குளங்களில் சீராக மண் எடுக்காமலும், குறிப்பிட்ட அளவை மீறி ஆழமாக மண் எடுப்பதாலும், ஏரி, குளங்களில் பல இடங்கள் மெகா சைஸ் பள்ளங்களாக மாறியுள்ளன.
இது, நீர்நிலைகளை பயன்படுத்தும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், சட்ட விரோதமாக பலர், அளவுக்கு அதிகமாக மண் எடுக்கின்றனர். இதை அதிகாரிகள் தடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இதுகுறித்து நீர்நிலை மீட்பாளர் நிமல் ராகவன் கூறியதாவது:
ஏரி, குளங்களை சீரமைக்க அனுமதி கேட்டால், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கும் அதிகாரிகள், வண்டல் மண் எடுப்பதில், அந்த நிபந்தனைகளை கடைப்பிடிப்பதில்லை.
ஒவ்வொரு நீர்நிலையிலும் சீராக மண் எடுக்காமல், பள்ளம் பள்ளமாக ஏரியை சீரழித்து வைத்துள்ளனர். குறிப்பிட்ட அளவை விட அதிகமாக, ௬ முதல் ௮ அடி வரை, ஜே.சி.பி., இயந்திரங்களை கொண்டு மண் அள்ளி வருகின்றனர்.
பல ஏரிகளையும், ஏற்கனவே முறையாக சீரமைத்து இருக்கும் நீர்நிலைகளையும் சிதைத்து விட்டனர்.
இதனால், கால்நடைகள், குளிக்க வருவோருக்கு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அடுத்த ஆண்டு, முறையாக மண் எடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகளை மிரட்டி மண் எடுக்கின்றனர்
ஏரிகளில், 3 அடிக்கு கீழ் விவசாயிகளுக்கு தேவையான வண்டல் மண் இருக்காது. ஆனால், 'விவசாயி' என்ற போர்வையில் சிலர், மண்ணை எடுத்து விற்கின்றனர்.
இது ஒரு புறம், ஏரியில் நீரை தேக்கி வைக்க பயனுள்ளதாக இருந்தாலும், முறையற்ற மண் அகழ்வால் நீர்வழி பாதைகள் மற்றும் கரைகள் சேதமடைந்து, தண்ணீரை சேமிக்க முடியாத சூழல் உருவாகி, ஏரி, குளங்கள் சீரழிகின்றன. தற்போது ஆற்றில் தண்ணீர் வந்து விட்ட சூழலிலும், ஆளுங்கட்சியினர் என சிலர், அதிகாரிகளை மிரட்டி, மண் எடுப்பது தொடர்ந்து வருகிறது.
- விவசாயிகள்