புகழுக்காக கணிப்புகளை வெளியிடக்கூடாது! தனியார் ஆர்வலர்களுக்கு வானிலை மையம் அட்வைஸ்
புகழுக்காக கணிப்புகளை வெளியிடக்கூடாது! தனியார் ஆர்வலர்களுக்கு வானிலை மையம் அட்வைஸ்
ADDED : ஜன 28, 2025 01:39 PM

சென்னை; தனியார் வானிலை ஆர்வலர்கள் புகழுக்காக வானிலை கணிப்புகளை வெளியிடக்கூடாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் மழை, வெயில் உள்ளிட்ட வானிலை அறிவிப்புகளை சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிடுவது வழக்கம். புயல், சூறாவளி, பெரும் வெள்ளம் போன்ற இடர்பாடான காலங்களில் தனியார் வானிலை ஆர்வலர்கள், மத்திய அரசின் வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுக்கு இணையாக கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறு தனியார் வானிலை ஆர்வலர்களின் கணிப்புகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந் நிலையில், புகழுக்காக தனியார் வானிலை ஆர்வலர்கள் காலநிலை பற்றிய அறிவிப்புகளை வெளியிடக்கூடாது என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலசந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;
மழைக்காலங்களில் வானிலை கணிப்புகள் என்பது அறிவியல்பூர்வமாக இருக்க வேண்டும். தனியார் வானிலை ஆர்வலர்கள் புகழுக்காக பேசுவதை மக்கள் பொருட்படுத்தக்கூடாது.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஜன.30, 31 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த 2 நாட்களும் வட தமிழகத்தில் லேசான மழை பெய்யும் என எதிர்பார்க்கலாம்.
சென்னையை பொறுத்தவரை இன்றும்(ஜன.28), நாளையும் (ஜன.29) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளைகளில் லேசான பனிமூட்டம் நிலவும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.