ADDED : ஆக 21, 2024 02:43 AM

சென்னை:'இம்ப்காப்ஸ்' நிறுவன தயாரிப்பு மருந்துகளை, மலேஷியாவிற்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவத்தை உள்ளடக்கி, 'இம்ப்காப்ஸ்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
'இம்ப்காப்ஸ்' நிறுவன மருந்துகளை, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, சென்னை திருவான்மியூரில் உள்ள, 'இம்ப்காப்ஸ்' மருந்து தயாரிப்பு ஆலையை, மலேஷியா துணை துாதர் சரவணகுமார் சமீபத்தில் பார்வையிட்டார்.
அப்போது, மருந்து தயாரிக்கும் முறை குறித்தும், பயன்படுத்தும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதன்படி, இம்ப்காப்ஸ் மருந்துகள், மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இம்ப்காப்ஸ் நிறுவன தலைவர் கண்ணன் கூறியதாவது:
இம்ப்காப்ஸ் நிறுவன தயாரிப்பு மருந்துகள், தென்மாநிலங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், மருத்துவமனைகளில் ஆண்டுக்கு, 35,000த்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். வெளிநாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக மலேஷியாவுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்யவும், அந்நாட்டினருக்கு, 'இம்ப்காப்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் பேச்சு முடிந்துள்ளது. சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, விரைவில் மருந்து ஏற்றுமதி பணிகள் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.