கவர்னர் மீது உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் கடிதம்
கவர்னர் மீது உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் கடிதம்
ADDED : பிப் 14, 2024 01:19 AM
சென்னை:கவர்னர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்கக் கோரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த கடிதம், பரிசீலனையில் உள்ளதாக, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சட்டசபை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, 'சட்டசபை விதி எண் 220ன்படி, சட்டசபையில் கவர்னரின் பேச்சில், சபையில் நீக்கப்பட்ட சில பகுதிகளை, உள்நோக்கத்தோடு, சமூக ஊடகமான 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள கவர்னரின் செயல்பாடுகள் குறித்து, உரிமை மீறல் தீர்மானத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும்' என, சபாநாயகரிடம் கடிதம் அளித்தார்.
சட்டசபையில் நேற்று, கேள்வி நேரம் முடிந்ததும், அவர் பேசியதாவது:
கவர்னர் மீது உரிமை மீறல் பிரச்னை கொடுத்துள்ளேன். கவர்னர் சட்டசபைக்கு வந்தபோது, போலீஸ் அணிவகுப்பு மரியாதையோடு, அதிகாரிகள் புடைசூழ, மரியாதையோடு அழைத்து வந்து உட்கார வைத்தீர்கள்.
கவர்னர் உரையாற்றும்போது, குறிப்பில் இல்லாததை தமிழில் பேசி, தேசிய கீதத்திற்கு முன் வெளிநடப்பு செய்தார். நீங்கள் பேசிய பின், சபைக்குறிப்பிலிருந்து அவர் பேசியதையும், நீங்கள் பேசியதையும் நீக்கி விட்டீர்கள்.
நீக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், கவர்னர் தன் 'எக்ஸ்' தளத்தில், சபையில் என்ன நடந்தது என்பதை, வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, ''உரிமை மீறல் தீர்மானம் கொடுத்துள்ளீர்கள். என் பரிசீலனையில் உள்ளது,'' என்றார்.

