UPDATED : செப் 03, 2011 02:29 AM
ADDED : செப் 02, 2011 11:47 PM

சென்னை:வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு புற்றீசல் போல் பெருகி வரும் கிளினிக், மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில், தமிழக அரசு கொண்டு வந்த சட்டம், 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை.கண்காணிப்பு இல்லாமல், யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லாமல் மருத்துவமனைகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றன. கத்திரிக்காய் விலையை, 50 காசு உயர்த்தினால் கூட, கடைக்காரரிடம் சண்டை போடும் பலர், மருத்துவமனையில் ஏன், எதற்கு என்ற கேள்வியே இல்லாமல், கேட்கும் பணத்தைக் கொடுக்கின்றனர்கிளினிக், மருத்துவமனைகள் துவங்குவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை.
மருத்துவமனை நடத்துவதற்கு டாக்டராக இருக்க வேண்டிய அவசியமில்லை. அங்கு சிகிச்சை அளிப்பதற்கு தகுதியான டாக்டர்கள் இருந்தால் போதும். இதனால், வர்த்தக நோக்கில் பலர் மருத்துவமனைகளைத் துவங்கினர்.பல மருத்துவமனைகள், வர்த்தக நோக்கத்தை கொண்டிருப்பதால், அடிப்படை தேவைகள் முழுமையாகச் செய்யப்படவில்லை.இதையெல்லாம் கருத்தில் கொண்டு, மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த தமிழகத்தில் 1997ம் ஆண்டு மருத்துவமனை ஒழுங்கு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்துக்கு, டாக்டர்களிடையே போதிய வரவேற்பில்லை. இதனால், சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை வரையறை செய்யாமல் அரசு காலம் தாழ்த்தி வந்தது.
இந்நிலையில், மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு கொண்டு வந்த சட்டம், பார்லிமென்டில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது, விழித்துக் கொண்ட தமிழக அரசு, மருத்துவமனை ஒழுங்கு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்தது. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை அமல்படுத்த, டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இச்சட்டம் மருத்துவமனைகளை பதிவு செய்வதை கட்டாயமாக்கி, அதற்கான கமிட்டியில் மாவட்ட கலெக்டரை தலைவராக நியமிக்கவும் வழி செய்தது. இதை டாக்டர் சங்கம் எதிர்த்தது.
அதுபோல் நோய்களின் விவரம், சிகிச்சை விவரம், மருத்துவமனையில் உயிரிழந்தோர் விவரம் போன்றவற்றை பதிவு செய்வதையும் அச்சட்டம் கட்டாயமாக்கியது. இதை டாக்டர்கள் சங்கம் ஏற்கவில்லை. இவ்வாறு பதிவு செய்வதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களை சேர்க்க மருத்துவமனைகள் தயக்கம் காட்டும் என வாதிட்டனர். இதனால், சட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சிறிதும், பெரிதுமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளினிக்குகள், ரத்த பரிசோதனை நிலையங்கள், ஸ்கேன் மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளினிக், மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. ஆனால், இந்த மருத்துவமனைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
ஸ்கேன் மையங்களுக்கு, கடைகள் ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்படுகிறது. உரிய லைசென்ஸ் முறை இல்லாததால், கட்டணம் உட்பட ஸ்கேன் மையங்களின் அன்றாட நடைமுறைகளில் அரசு தலையிட முடியாது. மருத்துவமனைகளுக்கும் இது பொருந்தும், இந்திய டாக்டர்கள் சங்கத்தின் தமிழக தலைவர் பிரகாசம் இதுகுறித்து கூறும் போது, ''மருத்துவமனைகளை முறைப்படுத்த சட்டம் கொண்டு வருவதை வரவேற்கிறோம். ஆனால், டாக்டர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று, சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும்.
இந்த புதிய அரசு இதில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.மருத்துவமனைகளுக்கான பல்வேறு சேவைகளை அளித்து வரும், 'வேல்யு ஆடட் கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவன இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் கூறியதாவது:மருத்துவமனைகள், பரிசோதனை மையங்களுக்கு உரிய லைசென்ஸ் முறையில்லாததால், அவர்கள் வைத்தது தான் கட்டணம் என்ற நிலை உள்ளது. பரிசோதனை கருவிகளின் விலை அதிகம் என்பதோடு, ஓராண்டுக்குள் புதிய, நவீன கருவிகள் வந்து விடுவதால், குறைந்த காலத்துக்குள் போட்ட பணத்தை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. லைசென்ஸ் முறையை அறிமுகப்படுத்தி, எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மை இருந்தால், கட்டணங்கள் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு வெங்கடகிருஷ்ணன் கூறினார்.
இன்சூரன்ஸ் ஏஜன்ட் நாராயணன் கூறும்போது, ''முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில், அடிப்படை வசதிகளைக் கொண்டு, மருத்துவமனைகள் தரம் பிரிக்கப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், பை-பாஸ் அறுவை சிகிச்சைக்கு 'ஏ' பிரிவு மருத்துவமனைக்கு 90 ஆயிரம் ரூபாய் என, அரசு நிர்ணயித்துள்ளது. தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது போல், ஒரு கமிட்டி அமைத்து, தனியார் மருத்துவமனைகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்; மேலும், அடிப்படை வசதிகளையும் வரையறுக்க வேண்டும்,'' என்றார்.

