பருத்தி மகசூல் குறையும்பட்சத்தில் இறக்குமதிக்கு வரிவிலக்கு தேவை நுாற்பாலை துறையினர் எதிர்பார்ப்பு
பருத்தி மகசூல் குறையும்பட்சத்தில் இறக்குமதிக்கு வரிவிலக்கு தேவை நுாற்பாலை துறையினர் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 16, 2025 01:41 AM

திருப்பூர்:அக்., 2024 - செப்., 2025 வரையிலான நடப்பு பருத்தியாண்டில், மகசூல் குறைய வாய்ப்புள்ளதால், பஞ்சு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென, நுாற்பாலைகள் வலியுறுத்தி
உள்ளன.
இந்திய பருத்தி சங்கம், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையிலும், தொழில்துறைக்கு தடையின்றி பஞ்சு கிடைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
விவசாயிகளிடம் இருந்து பருத்தியை கொள்முதல் செய்து இருப்பு வைத்து, நுாற்பாலைகளுக்கு விற்கச் செய்கிறது. நடப்பு ஆண்டில், 312 லட்சம் பேல் அளவுக்கு, பருத்தி மகசூல் இருக்குமென அது கணக்கிட்டு
உள்ளது.
கடந்த மாத பருத்தி மார்க்கெட் நிலவரம் தொடர்பாக, இந்திய பருத்தி சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தாண்டு 43 லட்சம் பேல் பஞ்சு உபரியாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க கையிருப்பு 30 லட்சம் பேல்; மகசூல் வாயிலாக, 302 லட்சம் பேல்; இறக்குமதி வாயிலாக, 26 லட்சம் பேல் என, மொத்த வரத்து, 358 லட்சம் பேல் பஞ்சு கிடைக்குமென கணித்துள்ளது.
நுாற்பாலைகள் தேவைக்கு, 299 லட்சம் பேல் பஞ்சு தேவை எனவும், ஜவுளி அல்லாத தேவைக்கு, 16 லட்சம் பேல்கள் தேவை எனவும் கணக்கிட்டுள்ளது.
அதன்படி, மொத்த தேவை, 315 லட்சம்
பேல் போக, 43 லட்சம் பேல் உபரியாக இருக்கும் என்றும், அவற்றில் இருந்து, 17 லட்சம் பேல் வரை, ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
வழக்கமான அளவை காட்டிலும், பருத்தி மகசூல் குறையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளதால், இறக்குமதி வரியில் இருந்து விலக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இது குறித்து நுாற்
பாலை உரிமையாளர்கள் கூறுகையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சு விலை சீராக
இருக்கிறது.
''தற்போது, ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு, 54,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வழக்கத்தைவிட, பருத்தி மகசூல் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
''உள்நாட்டு தேவையும் அதிகரித்து வருவதால், பஞ்சு இறக்குமதிக்கான வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும்,'' என்றனர்.
வட மாநிலங்களில்...
குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், குறைந்த மகசூல் காரணமாக, நடப்பு பருத்தி ஆண்டில் பருத்தி உற்பத்தி 301.75 லட்சம் பேலாக குறைய வாய்ப்புள்ளதாக, இந்திய பருத்தி சங்கம் தெரிவித்துள்ளது. இது, கடந்த 2023 - 24ல், 327.45 பேலாக இருந்தது
குறிப்பிடத்தக்கது.
பருத்தி மகசூல் குறைந்துள்ளபோதிலும் அதன் தரத்தில் எந்த குறைபாடும் இல்லை என்றும், தொடர்ந்து உயர் தரத்திலேயே கிடைப்பதாகவும், பருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நடப்பு பருத்தி ஆண்டில் 17 லட்சம் பேல் ஏற்றுமதி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டில் 28.36 லட்சம் பேல் ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

