ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: தொழில் துறையினர் வரவேற்பு
ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: தொழில் துறையினர் வரவேற்பு
ADDED : பிப் 01, 2025 11:16 PM
சென்னை:மத்திய பட்ஜெட் குறித்து, தொழில் வல்லுனர்கள் கருத்து:
மோகன், வாசுதேவன், தலைவர் மற்றும் பொதுச்செயலர், தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம்:
சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் திருத்தப்பட்ட முதலீடு, வருவாய் அளவுகோள், சிறு தொழில்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மையை பாதிக்கும். அளவுகோல் வரம்பை அதிகரிப்பது மட்டும், சிறு தொழில்களுக்கு வளர்ச்சியை அளிக்காது. எனவே, குறைந்த வட்டியில் கடன், மானியம், சிறந்த திட்டங்களை உள்ளடக்கி, சிறு, குறுந்தொழில்களுக்கு தனிக்கொள்கை அறிவிக்க வேண்டும்.
கடன் உத்தரவாத திட்டத்திற்கான வரம்பை, 5 கோடி ரூபாயில் இருந்து, 10 கோடி ரூபாயாக உயர்த்தியதை வரவற்கிறோம். தொழில்முனைவோராகும் பெண்களுக்கு, 2 கோடி ரூபாய் வரை புதிய கடன் திட்ட அறிவிப்பை வரவேற்கிறோம்.
கோபாலகிருஷ்ணன், தென்மண்டல தலைவர், இந்திய ஏற்றுமதியாளர்கள் அமைப்புகளின் கூட்டமைப்பு:
தனிநபர் வளர்ச்சி, தொழில் துறை முன்னேற்றம், ஏற்றுமதி வளர்ச்சி ஆகியவற்றுக்கு வலுவான அடித்தளம் உருவாக்குவதாக, பட்ஜெட் அமைந்துள்ளது. விவசாயம், சிறு, குறுந்தொழில்கள், முதலீடு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கடல் போக்குவரத்து மேம்பாட்டு நிதி, சரக்கு மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளை மேம்படுத்தி, இந்தியாவை ஒரு முக்கியமான சர்வதேச மையமாக மாற்றும்.
ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம், பாரத் டிரேட் நெட், விமான சரக்கு கிடங்கு மேம்பாடு ஆகியவை, இந்திய உற்பத்தி தயாரிப்புகளை, உலக சந்தையில் எளிதில் நுழைய உதவும்.
மோகன், செயலர், தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனம்:
அரிசி ஆலைகளை உள்ளடக்கிய சிறு, குறு தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த வங்கி கடனை, 5 கோடி ரூபாயில் இருந்து, 10 கோடி ரூபாயாக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது.
நெல் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், 'கிசான் கிரெடிட் கார்டில்' மேலும் கடன் பெற, 3 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது. இதன் காரணமாக விதைகள் மற்றும் உரங்கள் வாங்க ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.