ADDED : செப் 29, 2024 02:50 AM
சென்னை:'அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டதைக் கண்டித்தும், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை, உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், மதுரையில் அக். 9ம் தேதி அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும்' என, அக்கட்சி பொதுச் செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக இளைஞர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் வீதம், ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். அரசுத் துறைகளில் 5.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இதை வலியுறுத்தியும், அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, தாலிக்கு தங்கம், இரு சக்கர வாகன மானியம், மாணவர்களுக்கு லேப்டாப் போன்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டதை கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், மதுரையில் அக். 9ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும்.
மதுரை, பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் எம்.ஜி.ஆர்., திடலில், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்க உள்ள, உண்ணா விரதப் போராட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமை வகிப்பார். முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், செல்லுார் ராஜு ஆகியோர், உண்ணாவிரதத்தை துவக்கி வைப்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.