மோடி 'ரோடு ஷோ' வில் குழந்தைகள்; தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்பு
மோடி 'ரோடு ஷோ' வில் குழந்தைகள்; தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்பு
UPDATED : மார் 20, 2024 03:35 AM
ADDED : மார் 19, 2024 10:46 PM

சென்னை:கோவையில், பிரதமர் மோடி பங்கேற்ற 'ரோடு ஷோ'வில், பள்ளி குழந்தைகள் பங்கேற்றது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலரிடம், தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது.
கோவையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற, 'ரோடு ஷோ' நிகழ்ச்சி நடந்தது. சாலையின் இருபுறமும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு, மலர் துாவி மோடியை வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவ - மாணவியரும் பங்கேற்றதாக, தி.மு.க., சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம், புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க., வழக்கறிஞர் சரவணன் கூறியதாவது:
கோவையில் நேற்று முன்தினம், பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவுக்கு பள்ளிக் குழந்தைகள் அழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், பா.ஜ.,வை புகழ்ந்து பாட்டு பாடியுள்ளனர். இது, தேர்தல் நடத்தை விதி மீறல். குழந்தைகளை எந்தவிதமான தேர்தல் பிரசாரத்துக்கும் பயன்படுத்தக்கூடாது என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
பா.ஜ., தன் இருப்பை காண்பிக்க, குழந்தை முதல் முதியோர்கள் வரை ஆதரவு இருப்பதை காண்பிக்க, குழந்தைகளை சட்ட விரோதமாக பயன்படுத்தி உள்ளது. இது தேர்தல் விதி மீறல் மட்டுமல்ல. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின்படியும் குற்றம். இதை ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்ட போது, ''பிரதமர் ரோடு ஷோவில், பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை பெறப்பட்டதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

