அரசியலில் பெண்களின் அறிவு, ஆற்றலை பார்ப்பதில்லை உயரமா, நிறமா என்றே பார்க்கின்றனர்: தமிழிசை புகார்
அரசியலில் பெண்களின் அறிவு, ஆற்றலை பார்ப்பதில்லை உயரமா, நிறமா என்றே பார்க்கின்றனர்: தமிழிசை புகார்
ADDED : ஜன 07, 2024 01:39 AM

மதுரை:''அரசியலில் பெண்களின் அறிவு, குணம், ஆற்றலை பார்க்கமாட்டார்கள். உயரமா, நிறமா, அழகா என்று தான் பார்ப்பர். பெண்களாகிய நீங்கள் உள்ளே எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்,'' என, மதுரையில் கேசவ சேவா சங்கம் நடத்திய சக்தி சங்கமம் நிகழ்ச்சியில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை பேசினார்.
தெலுங்கானா கவர்னர் தமிழிசை பேசியதாவது:
ஒவ்வொரு பெண்ணும், ஆயிரம் ஆண்களுக்கு சமமானவர்கள். பெண்கள் தங்களை மகிழ்விக்காமல், திருப்திப்படுத்தாமல், மற்றவர்களையும் உலகத்தையும் மாற்ற முடியாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான், வீடும், நாடும் மகிழ்ச்சியாக இருக்கும். அரசியலுக்கு பெண்கள் அதிகமாக வர வேண்டும்.
மலர் பாதையல்ல
அதற்காகவே, பிரதமர் மோடியின் முயற்சியால் லோக்சபா, ராஜ்யசபாவில் இடஒதுக்கீடு மசோதா தாக்கலானது. பலமுறை பல கட்சிகள் ஆட்சியில் இருந்தும், இதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
ஒரு பெண், வாழ்க்கையில் முன்னேறுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. நம் பாதை மலர் பாதை அல்ல. இங்கே கவர்னராக நிற்பதற்கு முன், எவ்வளவு கடுமையான பாதையை கடந்து வந்தேன் என்று உங்களுக்கு தெரியும்.
இங்கே நம் அறிவையோ, குணத்தையோ ஆற்றலையோ பார்க்க மாட்டார்கள். நிறத்தையும், உயரத்தையும், அழகையும், மிளிர்கிறோமோ என்று தான் பார்ப்பர். வெளித்தோற்றம் என்பது வீணான தோற்றம்.
உள்ளே எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். வெளித்தோற்றத்தை மற்றவர்கள் எவ்வளவு பரிகசிக்கின்றனரோ, அந்தளவு உள்ளுக்குள் நாம் சக்தி மிகுந்தவர்களாக பரிணமிக்க வேண்டும்.
கவிதை படித்தேன்
நிர்வாக திறமை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம். பெண்களால், பெண்களையும் ஆண்களையும் சமாளிக்க முடியும். ஆண்களால் பெண்களை சமாளிக்க முடியாது. சமையலில் அவியல் செய்வதோடு, அரசியல் செய்யவும் முடியும்.
'தினமலர்' நாளிதழின் வாரமலர் புத்தகத்தில் வெளியான ஒரு கவிதையை படித்தேன். அந்த கவிதை, 'நீ மனுஷியாவது எப்போது' என்று முடியும். அதேபோல பெண்கள் சக்தி உள்ளவர்களாக சந்தோஷமான மனுஷியாக மாறி சாதனை படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.