லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெல்லும்; சவால் விட்டு பேசிய முனுசாமி
லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெல்லும்; சவால் விட்டு பேசிய முனுசாமி
ADDED : ஜன 31, 2024 10:15 PM

லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் பல லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க.,வெல்லும். முடிந்தால் தடுத்து பாருங்கள் என, தி.மு.க.,வினருக்கு, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., சவால் விடுத்தார்.
கிருஷ்ணகிரி, ஐந்து ரோடு ரவுண்டானா அருகில் அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாணவரணி செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாணவரணி தலைவர் ராகேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்,ஏ., பேசியதாவது:
பல்வேறு மாநிலங்களில் அவரவர் தாய்மொழி பேசுகிறார்கள். ஆனால் வேற்று மொழியை திணிக்கும் போது போராடி உயிர் நீத்த தியாகிகள் தமிழர்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். மொழி பெருமை பேசும் தி.மு.க.,வுக்கு மொழிப்போர் தியாகிகள் தினம் நடத்த அருகதை கிடையாது. இலங்கையிலே நம் இனத்தவர்கள் போராடும் போது, தி.மு.க.,வினர் ஒன்றும் செய்யவில்லை. அ.தி.மு.க.,வின் எம்.ஜி.ஆர்.,செய்தார். பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் மொழியின் தொன்மை குறித்தும், திருக்குறளை அடிக்கோடிட்டும் பேசுகிறார். அவர் கூறும் ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்டவற்றை வரவேற்கிறோம். ஆனால் ஒரே மொழி என வந்துவிடக்கூடாது.
தமிழ் மொழியையும் மத்திய ஆட்சி மொழியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். மத்தியில், பா.ஜ., ஆட்சியில் இணக்கமாக இருந்து பல திட்டங்களை சாதித்தது, அ.தி.மு.க., ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சி நடத்தும், தி.மு.க., மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால், கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறவில்லை. அ.தி.மு.க.,வின் கடந்த, 10 ஆண்டு கால ஆட்சியில், 3 லட்சம் கோடி கடன் இருந்தது. ஆனால் தற்போதைய, தி.மு.க.,வின் மூன்றாண்டு ஆட்சியில், 2.28 லட்சம் கோடி கடன்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு நிர்வாக திறமையில்லை.
லோக்சபா தேர்தலில்,தமிழகத்தின், 40 தொகுதிகளையும் ஜெயிப்போம் என தி.மு.க.,வினர் பேசுகின்றனர். கிருஷ்ணகிரி மேடையில் நின்று நான் சொல்கிறேன். அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளராக அல்ல, எம்.எல்.ஏ.,வாக அல்ல, ஒரு அ.தி.மு.க., தொண்டனாக கூறுகிறேன். வரும் லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் பல லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெறும். முடிந்தால் தி.மு.க., தடுத்து பார்க்கட்டும். அடுத்தாண்டு நடக்கும் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் கிருஷ்ணகிரி, அ.திமு.க., எம்.பி.,யும் இந்த மேடையில் இருப்பார்.இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அசோக்குமார், தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.