ஈரோடு வெற்றியால் அரசியல் கட்சிகளின் மனநிலையில் மாற்றம்!
ஈரோடு வெற்றியால் அரசியல் கட்சிகளின் மனநிலையில் மாற்றம்!
UPDATED : பிப் 10, 2025 12:51 AM
ADDED : பிப் 09, 2025 11:54 PM

டில்லி சட்டசபை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் கட்சிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலின் போது, கூட்டணிகள் மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளதால், பல பார்முலாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அது மட்டுமின்றி, கூட்டணி மாறும் போது, தங்களுக்கு கூடுதல் 'சீட்' கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறிய கட்சிகளும் குதுாகலமாக உள்ளன.
இது குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க., தலைமையில் ஒரு கூட்டணியும் களம் இறங்கின. நாம் தமிழர் கட்சி தனித்து களம் கண்டது.
அடுத்ததாக, 2024ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறிய பா.ஜ., அதன் தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்தது.
அதனால், மூன்று கூட்டணிகள் மோத, நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து களமிறங்கியதால், நான்கு முனைப்போட்டி நிலவியது.
இதில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தோல்வியை சந்தித்த அ.தி.மு.க., இனி எந்த தேர்தலிலும், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தது. இது, தி.மு.க.,வுக்கு உற்சாகத்தை அளித்தது.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இல்லை என்றால், தேர்தல் களம் எளிதாகும் என்பது தி.மு.க., மேலிடத்தின் கணக்கு. இந்த சூழ்நிலையில் தான், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் துவக்கினார்.
வரும் சட்டசபை தேர்தலுக்கு நடிகர் விஜய், தன் தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கினால், ஆட்சிக்கு எதிரான அதிருப்தி ஓட்டுகள் சிதறும்.
அதனால், தற்போதுள்ள கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தால், மீண்டும் எளிதாக ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்பது தி.மு.க., தலைமையின் நம்பிக்கை.
எனவே, சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகள் வெற்றி இலக்கு என்ற கோஷத்துடன், ஆளுங்கட்சி தேர்தல் பணிகளை தற்போதே துவக்கி விட்டது. அதேநேரத்தில், தி.மு.க.,வின் 200 தொகுதிகள் இலக்கு, கூட்டணிகட்சிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க., தேர்தலின் போது தங்களுக்கு தாராளமாக தொகுதிகளை ஒதுக்குமா; கேட்கும் தொகுதிகளை தருமா என்ற சந்தேகமும் அக்கட்சிகளுக்கு உருவாகியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், டில்லியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன் வாயிலாக, அக்கட்சியின் செல்வாக்கு குறையவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது.
அதேபோல, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த இடைத்தேர்தலை விட அதிக ஓட்டுகள் பெற்று, பல கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, தி.மு.க.,வில் உள்ள கூட்டணி கட்சிகள் இதில் மகிழ்ச்சி அடைந்துள்ளன.
'நம் ஆதரவு இல்லை என்றால், வரும் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறுவது கடினம்; எனவே, அதிக சீட்டுகளை கேட்கலாம். தி.மு.க., கூடுதல் தொகுதிகள் தர மறுத்தால், அ.தி.மு.க., - த.வெ.க., என, அக்கட்சிகளின் தலைமையிலான கூட்டணிக்கு செல்லலாம்' என்ற மனநிலைக்கு வந்துள்ளன.
இதற்கிடையில், கூட்டணி இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை அ.தி.மு.க., மேலிடமும் உணர்ந்துள்ளது. அதனால், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. அது நடக்காவிட்டால், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளுடன் அணி சேரவும் தீர்மானித்துள்ளது.
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கடந்த 7ம் தேதி நடந்த ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அக்கட்சியின் பொருளாளர் சீனிவாசன் பேசுகையில், 'பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக, ரகசிய பேச்சு நடந்து வருகிறது.'தற்போது வெளிப்படையாக எதையும் கூற முடியாது. கண்டிப்பாக வரும் தேர்தலில் பலமான கூட்டணி அமையும்' என்றார்.
இதன் வாயிலாக, பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் அக்கட்சி உறுதியாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல, விஜயின் த.வெ.க.,வும் பல கட்சிகளுடன் பேச்சை துவக்கி உள்ளது. இந்த சூழ்நிலைகளை பார்க்கையில், சட்டசபை தேர்தலின் போது, கட்சிகள் சில கூட்டணி மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அதற்கேற்ற வகையில், தொகுதி பங்கீடு உள்ள பேச்சுகளை நடத்த, பல கட்சிகள் பார்முலாக்களுடன் ஆயத்தமாகி வருகின்றன. மாறி வரும் நிலவரத்தால், தங்களுக்கு கூடுதல் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறிய கட்சிகளும் குதுாகலமாக உள்ளன.
இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -