மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.313 கோடியில் புது 'டவர் பிளாக்' திறப்பு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.313 கோடியில் புது 'டவர் பிளாக்' திறப்பு
ADDED : மார் 01, 2024 12:19 AM

சென்னை:அரசு துறைகள் சார்பில்கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.
உயர் கல்வித்துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள், பல்கலைகள் ஆகியவற்றில், 134.15 கோடி ரூபாயில், ஆய்வக கட்டடங்கள், வகுப்பறைகள், கணினி அறிவியல் கட்டடம் உட்பட பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், 313.25 கோடி ரூபாயில், ஆறு தளங்களுடன் கூடிய, புதிய டவர் பிளாக் கட்டடம், நவீன மருத்துவ உபகரணங்களுடன் கட்டப்பட்டுள்ளது
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 14.14 கோடி ரூபாயில், பல்வேறு மாவட்டங்களில், உதவி இயக்குனர் அலுவலகம், கால்நடை பன்முக மருத்துவமனை, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டடம் கட்டப்பட்டுள்ளது
வேளாண் துறை சார்பில், 210.75 கோடி ரூபாயில், புதிய ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், குளிர்பதன கிடங்குகள், சேமிப்பு கிடங்குகள், வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் விவசாயிகள் ஆலோசனை மையங்கள், புதிய உழவர் சந்தை, ஏலம் மற்றும் மதிப்பு கூட்டு மையம் போன்றவை கட்டப்பட்டுள்ளன.
இவை அனைத்தையும், கடந்த 27ம் தேதி தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அடிக்கல்
கடலுார், ராணிப்பேட்டை, சிவகங்கை, மதுரை, துாத்துக்குடி, பெரம்பலுார் மாவட்டங்களில், உயர் கல்வித்துறை சார்பில், 86.89 கோடி ரூபாயில், கல்லுாரிகளில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டப்பட உள்ளன.
கால்நடைத்துறை சார்பில், சென்னை, சைதாப்பேட்டை நாய் வளர்ப்பு பிரிவில், 5.95 கோடி ரூபாயில், உள்நாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையத்தின் விரிவாக்க கட்டடம் கட்டப்பட உள்ளது
வேளாண் துறை சார்பில், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில், செங்காந்தள் பூங்கா அருகில், 6.09 ஏக்கர் நிலத்தில், 'கலைஞர் நுாற்றாண்டு பூங்கா' அமைக்கப்பட உள்ளது.
இவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின், கடந்த 27ம் தேதி, தலைமைச் செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

