UPDATED : அக் 23, 2026 04:35 AM
ADDED : அக் 23, 2026 01:48 AM
தாராபுரம்: தாராபுரத்தில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட ஒன்பது பேருக்கு, தாராபுரம் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்பட ஒன்பது பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, கடந்த, 20ல் கோவையில் உள்ள அவரது வீட்டில், தாராபுரம் போலீசார் கைது செய்தனர். இது தவிர மேலும் எட்டு பேரை கைது செய்த தாராபுரம் போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அனைவரும் ஜாமின் கேட்டு தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதில் நீதிபதி உமா மகேஸ்வரி நேற்றிரவு தீர்ப்பளித்தார். கார்த்திகா உள்ளிட்ட ஒன்பது பேருக்கும் நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இது தொடர்பாக கார்த்திகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நன்மாறன் கூறுகையில், ''பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட பொய் வழக்கு இது. புகார்தாரரான காவல் உதவியாளர் ஆய்வாளர் மீது, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்,'' என்றார்.
