வைர நகைக்கடை உட்பட 30 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
வைர நகைக்கடை உட்பட 30 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
ADDED : டிச 10, 2025 08:11 AM

சென்னை: தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் உட்பட, நாடு முழுதும் 30 இடங்களில், வைர நகைக்கடைகள், சோலார் நிறுவன அதிபர் வீடு மற்றும் அலுவலங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை தியாகராய நகர், பசுல்லா சாலையில், ரெபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற, தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது.
இந்நிறுவனம் சார்பில், நிலக்கரி இறக்குமதி, மின்சார கார்களுக்கான பேட்டரி தயாரிப்பு, குளிர்சாதனம் மற்றும் குளிர்பதன பெட்டிகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நடத்தப்படுகின்றன. இந்நிறுவனத்தின் தொழிற்சாலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளன.
அதேபோல், சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில், 'ரெபெக்ஸ் டவர்' என்ற பிரமாண்டமான கட்டடத்தில், அலுவலகம், மின்சார கார்கள் உதிரி பாகங்கள் விற்பனையகம் ஆகியவை செயல்படுகின்றன.
இந்நிறுவனம், கடந்த ஐந்து ஆண்டுகளாக தாக்கல் செய்த வருமான வரி கணக்கை ஆய்வு செய்ததில், வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள், ரெபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில், நேற்று சோதனை நடத்தினர்.
அதேபோல், சென்னை ஆர்.ஏ.புரத்தில், 'சோலார் பேனல்' தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பசுபதி கோபாலன் என்பவர் உள்ளார்.
இந்நிறுவனமும் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியதால், ஆர்.ஏ., புரத்தில் உள்ள, அதன் அலுவலகத்திலும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, தியாகராய நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள, 'ஒயிட் பயர்' என்ற வைர நகைக்கடை, ஜி.என்.செட்டி சாலையில் உள்ள, ஈ.எப்.ஐ.எப்., என்ற வைர நகைக்கடையிலும், அதன் உரிமையாளர் வீடுகளிலும், சோதனை நடந்தது.
தமிழகத்தில் 10 இடங்கள், மும்பை உட்பட, நாடு முழுதும் 30 இடங்களில், வருமான வரித்துறை சோதனை நடந்தது.
சோதனை விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இன்றும் சோதனை தொடரும் என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

