ADDED : ஜன 09, 2025 05:47 AM
ஈரோடு : ஈரோட்டில், இரு கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட ஐந்து இடங்களில், வருமான வரித்துறையினர் இரண்டாம் நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு, செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பாங்க் நகரில் என்.ஆர். குரூப்ஸ்சின் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனி தலைமையகம் உள்ளது. தனியார், அரசு கட்டுமானங்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து, பணிகளை மேற்கொள்கிறது.
இந்த நிறுவனத்துக்கு சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி பெங்களூருவிலும் நிறுவனங்கள் உள்ளன. மின்சாரம், மின் அளவீடு கருவி, நீர் பாசனம், கட்டுமானம், சாலைகள், கடல் சார்பு துறைகளின கட்டுமானங்களை இந்த நிறுவனம் மேற்கொள்கிறது.
இந்த நிறுவனம், வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கிடைத்த புகார் அடிப்படையில், கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த, 7ல் சோதனையில் ஈடுபட்டனர்.
இதே போல், ஈரோடு அடுத்த முள்ளாம்பரப்பில் உள்ள ஆர்.பி.பி.கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்திலும் வருமான வரித்துறை சோதனை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இது தவிர என்.ஆர். திருமண மண்டபம், நவநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமலிங்கத்தின் வீட்டிலும் சோதனை நடந்தது. மேலும், அம்மாபேட்டை அருகே பூனாச்சியில் ராமலிங்கத்துக்கு சொந்தமான ஸ்பேக் ஸ்டார்ச் ப்ராடெக்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்நிலையில் நேற்று இரண்டாம் நாளாக, சோதனை தொடர்ந்தது. ராமலிங்கம் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் நெருங்கிய உறவினராவார். ஸ்பேக் ஸ்டார்ச் ப்ராடெக்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில், முதன்மை இயக்குதல் அதிகாரியாக, பழனிசாமியின் அக்கா மகன் வெற்றிவேல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.