ரசாயன விற்பனை நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை
ரசாயன விற்பனை நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை
ADDED : செப் 05, 2025 01:17 AM

சென்னை:சென்னையில் நேற்று, 'ஆர்க்கியன் கெமிக்கல்' நிறுவனம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வரி ஏய்ப்பு சென்னை தி.நகர், வடக்கு கிரசன்ட் சாலையில், 'ஆர்க்கியன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம், கடல் சார் பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகிறது.
அதன் முக்கிய நிர்வாகிகள், ரஞ்சித் மற்றும் மீனாட்சிசுந்தரம்.
இந்நிறுவனத்துடன் இணைந்து, 10க்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்களும் தொழில் செய்து வருகின்றன.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஹாஜிபிர், கட்சரான் ஆகிய இடங்களில் உற்பத்தி ஆலைகளும் உள்ளன.
ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய்க்கு வணிகம் செய்யும் இந்நிறுவனம், அதற்கு முறையான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக, வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நேற்று அதிகாரிகள், தி.நகரில் உள்ள ஆர்க்கியன் கெமிக்கல்ஸ் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
ஆவணங்கள் பறிமுதல் அதனுடன் தொடர்பில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப் பட்டது.
வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, ஆழ்வார்பேட்டை எம்.ஆர்.சி., நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு என, சென்னையில் நேற்று ஒரே நாளில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான ரசீது, கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் விபரங்கள் அடங்கிய டிஜிட்டல் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மட்டுமின்றி, இந்நிறுவனத்திற்கு சொந்தமாக குஜராத்தில் உள்ள ஆலைகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.