ADDED : செப் 29, 2024 01:26 AM
சென்னை:சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணியர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
சென்னை விமான நிலையத்தில், இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், உள்நாடு, வெளிநாடு என, 18.53 லட்சம் பயணியர் வருகை தந்துள்ளனர். இதுவே கடந்த ஆண்டு ஆகஸ்டில், 17.5 லட்சமாக இருந்தது. கடந்தாண்டை விட, 5.1 சதவீதம் பயணியர் வருகை அதிகரித்துஉள்ளது.
2.5 லட்சம்
கோவை விமான நிலையத்தில், நடப்பாண்டு ஆகஸ்டில், உள்நாடு, வெளிநாடு என, 2.7 லட்சம் பயணியர் வருகை தந்துள்ளனர். இதுவே கடந்தாண்டு ஆகஸ்டில், 2.5 லட்சமாக இருந்தது. கடந்தாண்டை விட, 6.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
திருச்சி விமான நிலையத்தில், நடப்பாண்டு ஆகஸ்டில், உள்நாடு, வெளிநாடு என, 1.6 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். இதுவே கடந்தாண்டு, 1.4 லட்சமாக இருந்தது. கடந்தாண்டை விட, 17.9 சதவீதம் பயணியர் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளது.
துாத்துக்குடி உள்நாட்டு விமான நிலையத்தை, நடப்பாண்டு ஆகஸ்டில், 19,237 பேர் பயன்படுத்தி உள்ளனர். இது கடந்தாண்டு ஆகஸ்டில் 16,526 ஆக இருந்தது. கடந்தாண்டை விட 16.4 சதவீதம் அதிகம்.
8,944 பயணியர்
மதுரை விமான நிலையத்தில், நடப்பாண்டு ஆகஸ்டில், உள்நாடு, வெளிநாடு என, 1 லட்சத்து, 8,944 பயணியர் வந்துள்ளனர்.
இது கடந்தாண்டு ஆக., மாதத்தில், 1 லட்சத்து 14,408 ஆக இருந்தது. பயணியர் வருகை, 4.8 சதவீதம் குறைந்துள்ளது. சேலம் விமான நிலையத்திற்கு, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 10,994 பேர் வந்து சென்றுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில், சர்வதேச முனையத்தில் மட்டும், கடந்தாண்டு ஆக., மாதத்தில் 4.9 லட்சம் பயணியர் வந்துள்ளனர்.
நடப்பாண்டு ஆக., மாதத்தில், 4.86 லட்சம் பயணியர் வந்துள்ளனர். உள்நாட்டு பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பயணியரின் வருகை குறைந்து வருகிறது.