புதிய பூண்டு வரத்து அதிகரிப்பு; கிடங்குகளில் பதுக்கியோர் அதிர்ச்சி
புதிய பூண்டு வரத்து அதிகரிப்பு; கிடங்குகளில் பதுக்கியோர் அதிர்ச்சி
ADDED : பிப் 18, 2025 05:40 AM
சென்னை : மத்திய பிரசேதம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், பூண்டு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, மார்ச்சில் பூண்டு அறுவடை துவங்கி, மே மாதம் வரை நீடிக்கும்.
ஆண்டுதோறும் சராசரியாக, 25,562 டன் பூண்டு அறுவடை செய்யப்படும். இதில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் மட்டும், 13,000 டன் உற்பத்தியாகும்.
நடப்பாண்டு முன்கூட்டியே பூண்டு அறுவடை துவங்கியுள்ளது. நாடு முழுதும் விளைச்சல் அதிகரித்து உள்ளது.
அதேநேரத்தில், பூண்டு ஏற்றுமதி குறைந்துள்ளது. சீனாவில் இருந்து பல்வேறு நாடுகள் குறைந்த விலையில் பூண்டு இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளன.
இதனால், கிடங்குகளில் பழைய பூண்டுகளை கையிருப்பில் வைத்துள்ள, ஆன்லைன் வியாபாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
மொத்த மற்றும் சில்லரை விலையில், பூண்டு விலை வேகமாகக் குறைந்து வருகிறது. கடந்த மாதம் கிலோ, 300 ரூபாய்க்கு மேல் விற்ற பூண்டு, கடந்த வாரம், 120 ரூபாய்க்கு சரிந்தது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட சந்தைகளில், நேற்று கிலோ புதிய பூண்டு, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
புதிய பூண்டு வரத்து அதிகரித்துள்ள நிலையில், கிடங்குகளில் கையிருப்பில் வைத்துள்ள பழைய பூண்டு மூட்டைகளை, குறைந்த விலையில் விற்க வேண்டிய அவசியம், வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

