திருப்புவனத்திற்கு வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு; குற்றங்களில் ஈடுபடாமல் கண்காணிப்பது அவசியம்
திருப்புவனத்திற்கு வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு; குற்றங்களில் ஈடுபடாமல் கண்காணிப்பது அவசியம்
ADDED : பிப் 18, 2025 03:33 AM
திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரத்தில், செங்கல் சேம்பர்கள், கிரானைட் பாலிஷ் தொழிற்சாலைகள் மற்றும் தோட்டங்களில் பணிபுரியும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களை மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பது அவசியம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மதுரை மாநகருக்கு அருகே, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் உள்ளது. மதுரை மாநகர் பகுதியின் கட்டுமானத் தேவைக்கு, திருப்புவனம் பகுதியில் இருந்து தான் செங்கல்கள், சித்துகல்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுகின்றன.
தப்பி வந்தவர்கள்
இதற்காக, மதுரை மாவட்ட எல்லையையொட்டி, 30க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
தவிர, கீழடி, கொந்தகை, பசியாபுரம், அகரம், மணலுார், காஞ்சிரங்குளம், பூவந்தியில், 100க்கும் மேற்பட்ட கிரானைட் பாலிஷ், செங்கல் தயாரிப்பு தொழிற்சாலைகளில் உள்ளுர் நபர்கள் பணிபுரிவதில்லை.
வாட்ச்மேன், மேலாளர் உள்ளிட்ட குறிப்பிட்ட பணிகளில் மட்டுமே, உள்ளுர் நபர்கள் பணிபுரிகின்றனர்.
இங்கு பெரும்பாலும் வடமாநில, வங்கதேச இளைஞர்கள் தான் அதிகளவில் தங்கி வேலை பார்க்கின்றனர். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சட்டவிரோதமாக தப்பி வந்தவர்கள் அதிகளவில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
கிரானைட் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் பற்றிய எந்த விபரமும், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் இல்லை.
விபரம் இல்லை
திருப்புவனம் வட்டார சேம்பர்கள், தோட்டங்களில் வேலை செய்ய வெளிமாநில நபர்களை அழைத்துவர ஏராளமான புரோக்கர்கள் உள்ளனர். இங்கு தங்கி பணிபுரிவோர் இரவில் வெளியேறி, மீண்டும் இரவிலேயே தங்கும் இடத்திற்கு வருகின்றனர்.
தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர் உள்ளிட்டோர் பற்றிய விபரங்களை, அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், திருப்புவனம், பூவந்தி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் பற்றிய எந்த விபரமும் இல்லை.
குறைந்த சம்பளத்தில், ஏராளமான தொழிலாளர்கள் குடும்பம், குடும்பமாக தகர ஷெட்களில் தங்கி பணிபுரிகின்றனர். இவர்களுடன் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபடுவோரும் தங்கியிருப்பதாக தெரிகிறது.
திருப்புவனம் தாலுகா வில் மட்டும் 3,000 வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர். மாவட்ட, போலீஸ் நிர்வாகம், திருப்புவனம், பூவந்தி செங்கல் சூளைகள், கிரானைட் ஆலை, தோட்டங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் பற்றி ஆய்வு செய்து, மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

