'இண்டியா' கூட்டணி கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காமல் நழுவல்
'இண்டியா' கூட்டணி கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காமல் நழுவல்
UPDATED : ஜூன் 01, 2024 07:25 AM
ADDED : மே 31, 2024 01:53 PM

சென்னை: லோக்சபா தேர்தல் மற்றும் பிரதமரை தேர்ந்தெடுப்பது குறித்து எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணி இன்று (ஜூன் 1) ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட லோக்சபா தேர்தலில், இதுவரை ஆறு கட்டம் முடிந்து விட்டது. நாளை (ஜூன் 1) ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலும், 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள், ஜூன் 1ல் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். அதற்காக டில்லி வருமாறு, 28 கட்சிகளின் தலைவர்களுக்கு, காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா ஏற்கனவே அறிவித்திருந்தார். லோக்சபா தேர்தலிலும், மேற்குவங்க மாநிலத்தில் இண்டியா கூட்டணியாக போட்டியிடாமல், தனித்து களம் கண்டதால் மம்தா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாலினுக்கு பதிலாக திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் வெளியாகும் நிலையில், வெற்றி பெறுவோமா என்றே தெரியாத நிலையில் முன்கூட்டியே கூட்டம் நடத்துவது எந்த வகையில் பலனளிக்கும் எனத் தெரியவில்லை. ஏனெனில் தேர்தல் முடிவுகளில் அதிக எம்.பி.,க்களை பெறும் எந்த கட்சிகள் பெறும் எனத் தெரியாத நிலையில், அவர்களும் பிரதமர் பதவிக்கு போட்டிப்போட வாய்ப்புள்ளது. இதனால், நாளை நடைபெற உள்ள கூட்டத்திலேயே இண்டியா கூட்டணி சார்பிலான பிரதமரை வேட்பாளரை முடிவு செய்வது சந்தேகமே.