குடியுரிமை சட்டம் குறித்து விமர்சனம் : அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி
குடியுரிமை சட்டம் குறித்து விமர்சனம் : அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி
ADDED : மார் 15, 2024 10:30 PM

புதுடில்லி :'குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அமெரிக்காவின் கருத்து தவறானது; தேவையற்றது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.சமீபத்தில், மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமர்சனங்களை முன்வைத்தன.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், ''குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் மத சுதந்திரத்தை பாதிக்கும். இது
எங்களுக்கு கவலைஅளிக்கிறது. இந்த சட்டத்தையும், அமல்படுத்தும் முறையையும் கூர்ந்து
கவனித்து வருகிறோம்,'' என்றார்.
அமெரிக்காவின் இந்த கருத்துக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:குடியுரிமையை வழங்குவதுதான் குடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம்; எவரது குடியுரிமையையும் பறிப்பது அல்ல. இந்த சட்டம் நாடு இல்லாமல் அகதிகளாக வந்தவர்களின் பிரச்னையை தீர்க்கிறது.
கண்ணியத்தை வழங்குகிறது; மனித உரிமையை ஆதரிக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் கருத்துகள் தவறானது. அதே சமயம் தேவையற்றது. இந்தியாவின் பன்முகத்துவ மரபுகள் மற்றும் பிரிவினைக்குப் பிறகான வரலாறு பற்றி சரியான புரிதல் இல்லாதவர்கள் பாடம் எடுக்காமல்
இருப்பது நல்லது. அதுமட்டுமின்றி இது இந்தியாவின் சட்ட விவகாரம். இந்தியாவின் நட்பு நாடுகள் மற்றும் நலன் விரும்பிகள் இந்த சட்டத்தை வரவேற்பர் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

