இந்தியா - வியட்நாம் விமான ஒப்பந்தம்: மீண்டும் சென்னையை சேர்த்தது அமைச்சகம்
இந்தியா - வியட்நாம் விமான ஒப்பந்தம்: மீண்டும் சென்னையை சேர்த்தது அமைச்சகம்
ADDED : ஏப் 04, 2025 06:45 AM

சென்னை : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, இந்தியா - வியட்நாம் இடையேயான விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில், மீண்டும் சென்னை சேர்க்கப்பட்டு உள்ளது.
நாடுகள் இடையே விமானங்களை இயக்குவதற்கு, 'பைலேட்டரல் ஏர் சர்வீஸ் அக்ரீமென்ட்' என்ற விமான போக்குவரத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இதில், விமானங்கள் வகை, 'பாயின்ட் ஆப் கால்' என்ற அனுமதிக்கப்பட்ட நகரங்களுக்கான பட்டியல், இடைநிறுத்தங்கள், வாராந்திர விமான சேவைகளின் எண்ணிக்கை, பயணியர் இருக்கை உள்ளிட்ட முக்கிய விபரங்கள் இடம் பெறும்.
கொரோனா காலத்துக்கு முன் வரை, வியட்நாம் விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில், டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா ஆகிய நான்கு நகரங்கள், பாயின்ட் ஆப் கால் பட்டியலில் இருந்தன. ஆனால், டில்லி, மும்பையில் இருந்து மட்டுமே, வியட்நாமுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன.
2023ம் ஆண்டு, இந்த ஒப்பந்தத்தில் இருந்து, சென்னை, கோல்கட்டா விமான நிலையங்கள் நீக்கப்பட்டு, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்கள் சேர்க்கப்பட்டன. இது, சென்னை விமான நிலையத்தின் முக்கியத்துவத்தை குறைப்பதாக இருந்தது. இது தொடர்பாக, நம் நாளிதழில் கடந்த மார்ச் 13ல்செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தமிழக எம்.பி.,க்கள் வில்சன், துரை ஆகியோர், பார்லிமென்டில் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து, வியட்நாம் நாட்டுக்கு விமானம் இயக்குவதற்கான பட்டியலில், மீண்டும் சென்னை சேர்க்கப்பட்டு உள்ளதாக, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால், சென்னையில் இருந்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவை விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

