செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் இந்தியா இனி புதிய வரலாறு படைக்கும்; கட்டுப்பாடு நீக்கத்தால் ஜவுளி உற்பத்தியாளர்கள் நம்பிக்கை
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் இந்தியா இனி புதிய வரலாறு படைக்கும்; கட்டுப்பாடு நீக்கத்தால் ஜவுளி உற்பத்தியாளர்கள் நம்பிக்கை
UPDATED : நவ 15, 2025 09:23 AM
ADDED : நவ 14, 2025 10:57 PM

திருப்பூர்: ''மூலப்பொருள் இறக்குமதிக்கான கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதால், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில், இந்தியா புதிய வரலாறு படைக்கும்,' என, ஜவுளித்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில், செயற்கை நுாலிழை உற்பத்தியை துவக்கும் முயற்சி பரவலாக நடந்தாலும், அதற்கான மூலப்பொருள் இறக்குமதிக்கு அனுமதி கிடையாது. மாறாக, துணியை இறக்குமதி செய்து, ஆடை உற்பத்தியை தொடர வேண்டிய நிலை இருந்தது. கடந்த 6ம் தேதி, திருப்பூர் வந்திருந்த, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இயக்குநர் வினம்ரா மிஸ்ராவிடம், 'ஜவுளித்துறைக்கு எதிர்மறையாக உள்ள தரக்கட்டுப்பாடு ஆணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று, ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து, 'தினமலர்' நாளிதழ், 'தொழில்' பக்கத்தில், கடந்த, 10ம் தேதி செய்தி வெளியானது. இதற்கிடையில், 'செயற்கை நுாலிழை உற்பத்திக்கான மூலப்பொருள் இறக்குமதிக்கு,கட்டுப்பாடுகளை தளர்த்தி, மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதனால்,செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில், புதிய வாய்ப்பு உருவாகியுள்ளதால், தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், ''மூலப்பொருள் இறக்குமதிக்கான தடைநீக்கப்பட்டுள்ளதால், ஜவுளித்துறையினர், செயற்கை நுாலிழை உற்பத்தியில் கால்பதிக்க முடியும்.
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி அதிகரித்தால், சர்வதேச சந்தையில் சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளின் போட்டியை சமாளிக்க முடியும். எனவே, இந்தியா, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கும்,'' என்றார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில், ''உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில், 60 சதவீதம் செயற்கை நுாலிழை ஆடைகள் பங்கு வகிக்கின்றன. மூலப்பொருள் எளிதாக கிடைத்தால், துணி இறக்குமதிக்கு பதிலாக,செயற்கை நுாலிழை மற்றும் துணி உற்பத்தி செய்வது எளிதாகும்; செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி வேகமெடுக்கும்,'' என்றார்.

