பிப்ரவரி மாதத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.12,248 கோடியாக அதிகரிப்பு இந்திய ஏற்றுமதியாளர் மகிழ்ச்சி
பிப்ரவரி மாதத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.12,248 கோடியாக அதிகரிப்பு இந்திய ஏற்றுமதியாளர் மகிழ்ச்சி
ADDED : மார் 20, 2024 10:21 PM

திருப்பூர்,:கடந்த மாதம், ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, 12,248 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளதால், ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் போர், பணவீக்கம் ஆகியவை காரணமாக, வளர்ந்த நாடுகள் பாதிக்கப்பட்டன. இந்தியாவில், ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகம், கடந்த ஓராண்டாக சுணக்கமாக இருந்தது.
இறக்குமதி நாடுகளில் இயல்பு நிலை திரும்பியதால், நம் நாட்டின் ஏற்றுமதி, கடந்த டிச., மாதத்தில் இருந்து அதிகரித்து வருகிறது.கடந்த 2023 பிப்., மாத ஏற்றுமதி, 3.05 லட்சம் கோடியாக இருந்தது, கடந்த மாதம், 3.43 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், சரிவு நிலையில் இருந்து, வளர்ச்சிப்பாதைக்கு திரும்பியுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 2023 பிப்., மாதம், 11,628 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதியாண்டில், ஏப்., முதல் பிப்., வரையிலான காலகட்டத்தில், 1.18 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக ஏற்றுமதி நடந்திருந்தது.
ஜவுளி ஏற்றுமதியில், டிச., மாதத்தில் இருந்து வளர்ச்சி கிடைத்துள்ளது. கடந்த மாதம், 12,248 கோடி ரூபாய் அளவுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது.
நடப்பு நிதியாண்டு துவக்கத்தில் வர்த்தகம் மந்தமாக இருந்ததால், ஏப்., முதல் பிப்., வரையிலான ஏற்றுமதி, முந்தைய ஆண்டை காட்டிலும், 10,000 கோடி ரூபாய் குறைந்துள்ளது; இருப்பினும், நிதியாண்டு நிறைவில், ஈடுகட்டப்படும் என்று தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''கடந்த மூன்று மாதங்களாக, ஏற்றுமதி ஆர்டர்கள் இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கின்றன.
புதிய ஆர்டர்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. பல மாதங்களுக்கு பின், ஆயத்த ஆடை ஏற்றுமதி இயல்பு நிலைக்கு வந்துள்ளது; வரும் ஏப்., மாதத்துக்கு பின்னர், வளர்ச்சிப்பாதையில் பயணிப்போம்,'' என்றார்.

