'இண்டிகோ' விமானங்களில் பிரச்னை ஏர்போர்ட்டில் பயணியர் தவிப்பு
'இண்டிகோ' விமானங்களில் பிரச்னை ஏர்போர்ட்டில் பயணியர் தவிப்பு
ADDED : ஜூன் 23, 2025 04:11 AM

சென்னை: சென்னையில் இருந்து நேற்று மதுரை செல்ல வேண்டிய, மூன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள், இயந்திர பழுது காரணமாக புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால், பயணியர் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நேற்று காலை, 7:45 மணிக்கு, 62 பயணியருடன் புறப்பட தயாரானது. அப்போது இயந்திரத்தில் பிரச்னை ஏற்பட்டதால், விமானம் தாமதமாக செல்லும் என்று, அறிவிக்கப்பட்டது. அதேபோல, காலை, 10:10 மணிக்கு, மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும், திடீர் இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.
இந்த விமானத்தில் தான், பா.ஜ., தலைவர்களான தமிழிசை, சுதாகர் ரெட்டி உட்பட, 67 பயணியர் மதுரை செல்லவிருந்தனர். ஆனால், விமானத்தில் பழுது ஏற்பட்டதால் காத்திருந்தனர். பின், காலை 7:45 மணிக்கு செல்ல வேண்டிய விமானம், பழுது சரி செய்யப்பட்டு, 10:45 மணிக்கு புறப்பட்டது. அதில், தமிழிசை, சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து பகல் 12:45 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அந்த விமானத்தில் செல்ல வேண்டிய பயணியர், பிற்பகல் 2:15 மணிக்கு, மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில் தான் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விமானங்கள் தாமதம் குறித்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில், முறையான அறிவிப்புகள் வெளியிடப்படாததால், பயணியர் விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.