UPDATED : ஆக 30, 2024 11:24 PM
ADDED : ஆக 30, 2024 11:21 PM

சென்னை : நம் நாட்டின் அசாம் மற்றும் மேற்கு வங்கம் வழியாக, மற்ற மாநிலங்களுக்குள் ஊடுருவி வந்த அண்டை நாட்டவரான வங்க தேசத்தினர், தற்போது கடல் வழியாகவும் ஊடுருவி, கிழக்கு கடலோர மாநிலங்களில் குடியேற ஆயத்தம் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகமுள்ள நகரங்களில், அவர்கள் சட்ட விரோதமாக குடியேறி வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, சென்னை புறநகர்கள் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட தொழில் அல்லது வணிக நகரங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையிட துவங்கியுள்ளனர்.
வங்க தேசத்தில் கலவரம் ஏற்பட்டு, அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்ட பின், அங்கிருந்து ஏராளமானவர்கள் வெளியேறி வருகின்றனர்.
அவர்கள் கடல் வழியாகவும், அசாம் மற்றும் மேற்கு வங்கம் வழியாகவும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்குள் ஊடுருவி வருவதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. வங்க தேசத்தினர் ஊடுருவல் பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுத இருப்பதாக, அசாம் முதல்வர் சமீபத்தில் கூறினார்.
தமிழகத்திற்குள் ஊடுருவியவர்கள், பெரும்பாலும் ஹோட்டல் மற்றும் ஜவுளி நிறுவனங்களில் எளிதாக வேலை கிடைத்து, ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்கள் உதவியுடன் இடம் பிடித்து தங்கி இருப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர், கருநீலம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி, 44 பேரை கைது செய்தனர்.
மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என, பொய் தகவல் தந்து இடமும், வேலையும் பெற்றதாக அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டுள்ளனர். போலி ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இவற்றை ஏற்பாடு செய்து தர, தமிழகத்தில் ஏஜென்ட்கள் செயல்பட்டு வருவதும் தெரியவந்தது.
இதற்கு முன், திருப்பூர் பல்லடம் சாலை வீரபாண்டி அருகே, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வங்க தேசத்தினர் 11 பேர் சிக்கினர். அந்த இடங்களில், தற்போதும் வங்க தேசத்தினர் பதுங்கி உள்ளனரா என்பது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
'மாநில போலீசாருடன் இணைந்து, கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வங்க தேசத்தினர் ஊடுருவ உதவி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பனியன் தயாரிப்பு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது' என அதிகாரிகள் கூறினர்.
- நமது நிருபர் -
வங்கதேசத்தில் யூனுஸ் தலைமையிலான தற்காலிக அரசு எடுத்து வரும் பல நடவடிக்கைகள், இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகில் பிரபலமான பயங்கரவாத அமைப்பு, அல் - குவைதா. இதனுடன் இணைந்த பயங்கரவாத அமைப்பு அன்சருல்லாஹ் பங்களா டீம். வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த இயக்கத்தின் தலைவர் ஜாஷிமுதின் ரஹ்மானி.
வங்கதேசத்தில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வந்த, ஏ.பி.டி., என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்பு, இந்தியாவிலும் கிளை பரப்பி வளர்ந்துள்ளது. இதன் ஸ்லீப்பர் செல்கள், இந்தியாவில் பரவலாக தங்கி செயல்படுகின்றனர்.
கைகோர்ப்பு
ஜாஷிமுதின் ரஹ்மானி, வங்கதேச சிறையில் இருந்த போதே, அவரது அமைப்பினர் இந்தியாவுக்குள் சில அசம்பாவிதங்களை ஏற்படுத்தியதை ஓர் அதிகாரி கவலையுடன் விவரித்தார். யூனுஸ் அரசு அவரை விடுதலை செய்திருப்பது, இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியாவுக்குள் செயல்படும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளோடு, ரஹ்மானியின் அமைப்பினரும் கைகோர்த்து செயல்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால், ராணுவ உளவு பிரிவினர், மத்திய உளவுத்துறைக்கு தகவல் அனுப்பி உள்ளனர். இதையடுத்து உளவு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய உளவுத்துறை அதிகாரி நமது நிருபரிடம் கூறியதாவது:
ஜமா அத் - இ - இஸ்லாமி என்ற அமைப்புக்கு ஷேக் ஹசீனா அரசு தடை விதித்திருந்தது. யூனுஸ் அரசு அதை ரத்து செய்துள்ளது. இந்திய பிரிவினைக்கு முன்பாகவே, சையத் அபுல் அலா மவுதுாதியின் தலைமையில், 1942ல் நிறுவப்பட்டது இந்த அமைப்பு. இதுவரை நான்கு முறை தடை செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த, 1959, 1964ம் ஆண்டுகளில் பாகிஸ்தானிலும், 1972ல் சுதந்திர வங்கதேசத்திலும், புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின், ஜமா அத் மற்றும் அனைத்து மத கட்சிகளும் தடை செய்யப்பட்டன.
தற்போது தடை நீக்கப்பட்டதன் வாயிலாக, இந்த அமைப்பானது மற்ற அரசியல் இயக்கங்களை போல, அரசியல் செயல்பாடுகளில் இறங்க வழி கிடைத்துள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் தான், ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர் போராட்டத்தின் போது, ஷெர்பூரில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையை தகர்த்து, 500க்கு மேற்பட்ட கைதிகளை விடுவித்தனர்.
காஜிபூரில் உள்ள மற்றொரு சிறையிலும் தாக்குதல் நடத்தி, 209 கைதிகள் தப்ப ஏற்பாடு செய்தனர். தப்பியவர்களில் பெரும்பாலானவர்கள் பயங்கரவாதிகள். அவர்களில் பலர் தமிழகத்தில் கால் பதித்திருக்கலாம் என்று நம்பகமாக தெரிகிறது.
வேறு அடையாளம்
அதேபோல, வங்கதேசத்தின் ஜமா அத் -- உல் --- முஜாஹிதீன் அமைப்பு, மேற்கு வங்கத்தில் ரகசியமாக செயல்படும் ஐ.எஸ்.-ஐ.எஸ்., கிளைக்கு பக்கபலமாக இயங்குகிறது. அதன் தீவிர உறுப்பினர் மேற்கு வங்கத்தின் லப்பூரை சேர்ந்த மஜ்னு எனப்படும் மோசி என்ற மொசிருதீன்.
இவர் பல ஆண்டுகளாக, திருப்பூரில் வேறு அடையாளத்துடன் வசிப்பதாக வங்கதேச உளவுத்துறை அனுப்பிய தகவலின்படி, கோல்கட்டாவிற்கு 2016ல் குடும்பத்துடன் செல்லும் வழியில், தமிழக போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
திருப்பூருக்கு அழைத்து வரப்பட்டு, அவருடைய வீட்டில் சோதனையிட்ட போது, ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அந்த பின்னணியில் தான், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதிலும் இருந்து உழைப்பாளிகளை ஈர்க்கும் திருப்பூர் நகரம், புகலிடம் தேடி வரும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பான இடமாக தோற்றம் அளிக்கிறது. தமிழக காவல் துறை மனம் வைத்தால் மட்டுமே அந்த தோற்றத்தை மாற்ற முடியும்.
இவ்வாறு அதிகாரி கூறினார்.