ADDED : மார் 03, 2024 02:08 AM

சென்னை: தமிழகத்தில், 2022ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு விபரங்கள் அடிப்படையில், சிறுத்தைகள் எண்ணிக்கை, 1,070 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுதும் புலிகள் மற்றும் யானைகள் எண்ணிக்கையை அறிய, தனித்தனியாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறுத்தைகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய மேற்பார்வையில், கடந்த 2022ல் சிறுத்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இது தொடர்பான முழுமையான புள்ளி விபர அறிக்கை, டில்லியில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேசிய அளவில், 2018ல், 12,852 ஆக இருந்த சிறுத்தைகள் எண்ணிக்கை, 2022ல், 13,874 ஆக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில், 2018ல், 868 ஆக இருந்த சிறுத்தைகள் எண்ணிக்கை, 2022ல், 1,070 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

