ADDED : டிச 27, 2024 01:42 AM

கூடலுார்:நம் மாநில விலங்கான, 'நீலகிரி வரையாடு' நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட முக்கூர்த்தி தேசிய பூங்கா, ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கணிசமாக உள்ளன.
இதன் வாழ்விடங்கள் சுருங்கி அழிவின் விளிம்பில் உள்ளதால், இதை பாதுகாக்க, மாநில அரசு, 'நீலகிரி வரையாடு பாதுகாப்பு' திட்டத்தை, 2022 முதல் செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுதும், நீலகிரி வரையாடுகள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு பணிகள், ஏப்., 29ல் துவங்கி மூன்று நாட்கள் நடந்தது. இதே காலகட்டத்தில் கேரள வனப்பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடந்தது.
அதில், நீலகிரி மாவட்டத்தில், முக்கூர்த்தி தேசிய பூங்கா, அதை ஒட்டிய நடுவட்டம், குந்தா, கோரகுந்தா உள்ளிட்ட ஆற்று பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. இப்பணியில் வன ஊழியர்கள் மற்றும் வன உயிரின ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
அதில், மாநிலத்தில், 1,031 நீலகிரி வரையாடு களும், அதை ஒட்டிய கேரள பகுதியில், 827ம் இருப்பது தெரியவந்தது. மேலும், முதுமலை முக்கூர்த்தி தேசிய பூங்காவில், 203 நீலகிரி வரையாடுகள் இருப்பது தெரிந்தது.
நீலகிரி வரையாடு திட்ட இயக்குநர் கணேசன் கூறுகையில், ''மாநிலம் முழுதும் நடப்பாண்டு, நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு ஏப்ரலில் நடந்தது. அடுத்த ஆண்டும், இதேபோன்று கணக்கெடுப்பு நடத்தப்படும். வரையாடுகளை பாதுகாக்க பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,'' என்றார்.

