தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு அநீதி: மத்திய அமைச்சர் முருகன் ஆவேசம்
தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு அநீதி: மத்திய அமைச்சர் முருகன் ஆவேசம்
UPDATED : பிப் 03, 2025 08:24 AM
ADDED : பிப் 03, 2025 07:01 AM

சென்னை: 'திருப்பரங்குன்றம் முருகன் மலையை காக்க, ஜனநாயக முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்வோரை, போலீசார் கைது செய்வது கண்டிக்கத்தக்கது. தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன், ஹிந்துக்களுக்கு எதிராக அநீதி நடந்து கொண்டிருக்கிறது' என, மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை, சிக்கந்தர் மலையாக மாற்ற, ஒரு கும்பல் முயன்று வருகிறது. திருப்பரங்குன்றம் மலையில், காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. பழனி ஆண்டவர் கோவில் மலைப்பாதை வழியாக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வேல் எடுத்து செல்லப்படுகிறது.
சில நாட்களுக்கு முன், அங்கு ஆடு பலி கொடுக்க சென்ற நபர்களால், பெரிய அளவில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது, தமிழ் கடவுளான முருக பெருமானை அவமானப்படுத்தும் செயல். ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையையும், மரபுகளையும் பறிக்கும் செயல். தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், ஹிந்துக்களுக்கு எதிராக அநீதி நடந்து கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக, ஹிந்து முன்னணி அமைப்பினர், திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை காக்க, நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஆர்ப்பாட்டத்தை தடுக்கவும், ஹிந்து முன்னணி பிரசாரத்தை ஒடுக்கவும், சுவரொட்டி ஒட்டுவோர் மற்றும் நோட்டீஸ் வழங்குவோரை, போலீசார் கைது செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவு சாப்பிட்டவர்களை, அங்குள்ள சமணர் வாழ் படுகைகளில், பச்சை பெயின்ட் அடித்தவர்களை கைது செய்யாத போலீசார், முருகன் மலையை காக்க, ஜனநாயக முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பது, கடும் கண்டனத்துக்கு உரியது.
போலீசாரின் ஹிந்து விரோத செயல்கள் கண்டிக்கத்தக்கவை. மிரட்டல்கள் வாயிலாக, திருப்பரங்குன்றம் ஹிந்து மக்களின் உரிமை போராட்டத்தை நசுக்கி விடலாம் என எண்ணி காவல் துறையினர் செயல்படுகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின், இதற்கு பதில் சொல்ல வேண்டும். தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின், ஹிந்து விரோத செயல்பாடுகளுக்கு, 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

