வெடி விபத்து குறித்து விசாரணை: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
வெடி விபத்து குறித்து விசாரணை: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
ADDED : அக் 09, 2024 06:10 AM

திருப்பூர் : திருப்பூரில், குண்டு வெடிப்பு தொடர்பாக உயர்மட்ட விசாரணை செய்ய வேண்டும் என்று, ஹிந்து முன்ணனி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: திருப்பூர், பாண்டியன் நகரில், மளிகை கடை மற்றும் வீடு ஒன்றில் பயங்கர சத்தத்துடன் வெடி மருந்து வெடித்ததில், சுற்றி இருந்த பல வீடுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இரு குழந்தைகள் உட்பட, நான்கு பேர் இறந்தனர்.
பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொழில் நகரமான திருப்பூரில் மக்கள் அடர்த்தியாக வாழக் கூடிய பகுதியில் ஆபத் தான வெடி மருந்துகள் மிக அதிகளவில் எப்படி எடுத்து வரப்பட்டது என்பது உட்பட பல சந்தேகங்களை இச்சம்பவம் எழுப்பி இருக்கிறது. அந்த இடத்தில் வெடிக்காத நிலையில் பெரிய உருண்டை வடிவிலான குண்டுகள் இருப்பதை காண முடிந்தது.பெரியளவில் வெடி மருந்துகள் வெளியே எடுத்து வரப்படுவதும், கொண்டு செல்லப்படுவதும் தொடர்ந்து நடந்துள்ளது. இது எப்படி போலீசாருக்கு தெரியாமல் போனது. திருப்பூர் மாநகர உளவுத்துறை ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்துள்ளது.
தமிழக போலீஸ் துறையும், உளவுத்துறையும் புதுப்பித்து சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு, இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணை குழு அமைக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு தலா, 50 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவிக்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு மொத்த செலவையும் அரசே ஏற்று கொண்டு வீடு கட்டி கொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

