சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான சி.என்.ஜி., விலையை முறைப்படுத்த வலியுறுத்தல்
சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான சி.என்.ஜி., விலையை முறைப்படுத்த வலியுறுத்தல்
UPDATED : ஆக 15, 2025 01:17 AM
ADDED : ஆக 15, 2025 12:36 AM

சென்னை:'டீசலுக்கு இணையாக சி.என்.ஜி., விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான சி.என்.ஜி., விலையை முறைப்படுத்த வேண்டும்' என, போக்கு வரத்து வல்லுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதிப்பு, டீசல் செலவு ஆகியவற்றை குறைக்க, டீசலுக்கு மாற்றாக சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு பயன்படுத்தி, பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. முதல் கட்டமாக, கடந்த ஜனவரியில் மூன்று பஸ்கள் சி.என்.ஜி., தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன.
அடுத்தகட்டமாக, 1,000 பஸ்களை சி.என்.ஜி., பஸ்களாக மாற்ற, அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன. அரசு பஸ்கள் மட்டுமின்றி, வாடகை வாகனங்களும், சொந்த பயன்பாட்டு வாகனங்களும் சி.என்.ஜி.,க்கு மாறி வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமின்றி, அதிக மைலேஜ் அளிக்கிறது. இதன் விலை, டீசலை விட குறைவாக இருந்தது.
ஆனால், கடந்த சில மாதங்களாக சி.என்.ஜி., விலை படிப்படியாக உயர்ந்து, டீசலை நெருங்கி விட்டது. 1 லிட்டர் டீசல் நேற்று 92.35 ரூபாய்க்கு விற்பனையானது. சி.என்.ஜி., 1 கிலோ 91.5 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதே போல் விலை உயர்ந்தால், டீசல் விலையை விட அதிகமாகும். எனவே, விலையை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, அண்ணா பல்கலை போக்குவரத்து பொறியியல் துறை, ஓய்வுபெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் கூறியதாவது:
சி.என்.ஜி., தொழில்நுட்பம் குறித்து தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால், அரசு பஸ்கள் மட்டுமின்றி, வாடகை ஆட்டோ, கார்கள், சொந்த வாகனங்களிலும் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
ஆனால், இந்த வகை வாகனங்கள் இயக்கப்படுவதை ஊக்கப்படுத்த, போதிய சலுகை இல்லை. விலையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது.
நகரங்களுக்கு நகரம் சி.என்.ஜி., விலை வேறுபாடு அதிகமாக இருக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். சி.என்.ஜி., வாகன பயன்பாட்டாளர்களுக்கு மானியம், வரிச் சலுகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.