ADDED : அக் 20, 2024 01:45 AM

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மின்சார கம்பிகளை சிறப்பு ரயில் இன்ஜினில் சென்று ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமான பணி 100 சதவீதம் முடிந்தது. இப்பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலத்தை இரு கட்டமாக திறந்து மூடி சோதனை செய்தனர். மேலும் புதிய பாலத்தில் சரக்கு ரயில் பெட்டியுடன் இருகட்டங்களாக சோதனை ஓட்டம் நடந்தது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து சான்று வழங்கிய பின் பாலம் திறப்பு விழா நடக்க உள்ளது. இந்நிலையில் நேற்று பாம்பன் பாலத்தில் பொருத்தி உள்ள மின்சார கம்பி வழித்தடம் மற்றும் மின் கம்பிகளை சிறப்பு ரயில் இன்ஜின் மூலம் ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
நேற்று மாலை வரை இந்த ஆய்வு பணி நடந்தது. அக்., 23க்குள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.